2 July 2009
தமிழ்சினிமா
களத்துல இறங்குவதென முடிவெடுத்துவிட்ட விஜய் தனது படத்தின் பாடல்களிலும் அரசியல் ’பஞ்ச்’ அடிக்க தொடங்கிவிட்டார். எம்.ஜி.ஆர். ஸ்டைலுக்கு தன்னை மாற்றிக்கொள்ளவேண்டும் என்பதில் ரொம்பவே ஆர்வம் காட்டுகிறார் விஜய். அதன் முதல் ஸ்டெப்தான் எம்.ஜி.ஆர் பட தலைப்புகளாக தேடிப்பிடிப்பது. வேட்டைக்காரன்,உரிமைக்குரல்,என பட்டியல் நீளத் தொடங்கியிருக்கும் நிலையில் பாடல்களிலும் புரட்சித்தலைவர் பாணி இருக்க வேண்டுமென கவிஞர்களுக்கு அன்புகட்டளையிட்டுள்ளாராம். அரசியல், தத்துவம், புத்திமதி எல்லாம் கலந்து கதம்பம் கட்டிய பாடல் ஒன்றை விஜய்க்காக எழுதியுள்ளார் கபிலன். ‘வேட்டைக்காரன்’ படத்தில் அப்பாடலை பயன்படுத்துகிறார் விஜய்.
“வறட்டி தட்டும் சுவத்துல
வேட்பாளர் முகமடா
காத்திருந்து ஓட்டுப்போட்டு
கருத்துப்போச்சு நகமடா
புள்ள தூங்குது இடுப்புல
பூனை தூங்குது அடுப்புல
நம்மநாட்டு நடப்புல
யாரும் இதைத் தடுக்கல”
என்ற பாடலுக்கு எம்.ஜி.ஆர் ஸ்டைலிலேயே ஆடி நடிக்கிறாராம் இளையத்தளபதி. புலி மாதிரி கோடு போட்டுக்கொண்டாலும் பூனை சவுண்டு ‘மியாவ்’தான்!
29 June 2009
தமிழ்சினிமா
ஆக்ஷன்னு ஆரம்பிக்கும் போது துவங்குகிற காதல், கட்டுன்னு சொல்லும் போது முடிஞ்சிருக்கும்! பெரும்பாலான நடிகைகளின் காதலுக்கு ஆயுள் அதிகபட்சம் இந்த சில நிமிடங்கள்தான். கேமிராவுக்கு முன்னால், சில நிமிடங்கள் என்றால் கேமிராவுக்கு வெளியே சில நாட்கள்தான் போலிருக்கிறது. அதையும் மீறி வாழ்வாங்கு வாழ்கிற காதல்கள் உண்டு. அது மிக மிக சொற்பமே!சரி விஷயத்துக்கு வந்துவிடுவோம். மீராஜாஸ்மின், மாண்டலின் ராஜேஷ் காதல் புட்டுக்கிச்சாம்! “உங்க வசதிக்கும் அழகுக்கும் நீங்க இருக்க வேண்டிய இடமே வேறம்மா” என்று பக்கத்திலிருந்து கொண்டே இந்த காதலை பஞ்சராக்கியவர், சாதாரண ஹேர் டிரஸ்சர் என்கிறார்கள். பாவம், சினிமா கொடுக்கிற சம்பளத்தை விடவா, மாண்டலின் அதிகம் சம்பாதித்து விடும்? பிரபல வார இதழ் ஒன்றிற்கு பதிலளித்திருக்கும் மாண்டலின் ராஜேஷ், அது முடிஞ்சு போன கதை. அதை திரும்ப திரும்ப கிளறினால் வருத்தம்தான் மிஞ்சும். என்னமோ நடந்துச்சு. போயிருச்சு. விட்டு விடுங்கள். நாம நினைக்கிறது எல்லாமா நடக்குது? மறுபடியும் சங்கீதத்துக்கு வந்துவிட்டேன். நிறைய கச்சேரி பண்றேன். காலம் எல்லாத்தையும் சரி பண்ணிவிடும் என்கிறார். இதுபற்றி கேட்கலாம் என்று போன் அடித்தால், வழக்கம் போல தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் மீராஜாஸ்மின். குறிப்பாக ராஜேஷின் தொடர்பு எல்லைக்கு அப்பால்…
29 June 2009
தமிழ்சினிமா
த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா நடிக்கிற தெலுங்கு படங்களை சைலண்ட்டாக தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கு கதைக்காகவும், ஹீரோவுக்காகவும் ஓடிய படங்கள் இங்கு சதைக்காகவே ரசிக்கப்படுகின்றன என்பது சொல்லாமலே புரியும். சென்னையை தாண்டி இந்த ஜிகினா சுந்தரிகளின் ஆட்டத்தை காண தவியாய் தவிக்கிற ரசிகர்கள், டப்பிங் பட பாகுபாடில்லாமல் கலெக்ஷனை கொட்டுவதால் அந்த ஏரியாவுலேயும் இப்போது பரபரப்பு.
மேற்படி தங்க தாரகைகளை தொடர்ந்து பிட்டு பட நாயகி லெவலுக்கு டூ பீஸ் தரிசனம் தர வந்திருக்கிறார் ப்ரியாமணி. இவரது படங்களையும் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள். இப்போது லேட்டஸ்டாக அதில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் காஜல் அகர்வால். இன்னொரு ஜோதிகா என்று இவர் வந்த புதிதில் வர்ணித்த பத்திரிகைகள், ஒரு படம் கூட ஓடாமல் போனாலும், தனது வர்ணிப்பை நிறுத்தவில்லை.

28 June 2009
தமிழ்சினிமா
தனது இந்திர விழா படத்தை திரண்டு வந்து பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்து 22 ஆயிரம் இமெயில்களை ரசிகர்களுக்கு அனுப்பியுள்ளாராம் நடிகை நமீதா. நமீதா என்ன செய்தாலும் பெரிய செய்தியாகி விடுகிறது. குறிப்பிட்ட படத்துக்கு அல்லது அவர் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அதுவே பெரிய விளம்பரமாகவும் அமைந்துவிடுகிறது. நமீதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய இந்திர விழா படத் தயாரிப்பாளர் அவருக்கு ஒரு யோசனை கூறியுள்ளார். அவரது ரசிகர் மன்றத்தில் உள்ளவர்கள் மற்றும் தெரிந்த நபர்களுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதி அதை இமெயில் மூலம் அனுப்பி வைப்பதே அந்த யோசனை. அந்த இமயிலில், தானும் ஸ்ரீகாந்தும் நடித்துள்ள புதிய படமான இந்திர விழைவைக் காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளாராம். மேலும் அதிலேயே படத்தின் சிறப்புகள், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் விவரங்களையும் அவர் அனுப்பியுள்ளார்.

28 June 2009
தமிழ்சினிமா
பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு இந்தியாவன் மைக்கேல் ஜாக்சன் எனப் புகழப்படும் பிரபுதேவா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ஜாக்சனின் ஸ்டைலைத்தான் நான் பின்பற்றி வருகிறேன். அவரது மரணம் எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மைக்கேல் ஜாக்சன் பாணி நடனத்தை இந்தியத் திரையுலகில் அறிமுகப்படுத்தியவர் பிரபுதேவா. அவரது முக்காலா முகாபுலா நடனம், அப்படியே மைக்கேல் நடனத்தை தழுவியது. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கப்பட்டவர் பிரபுதேவா. அவர் ஜாக்சன் மறைவுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபுதேவா கூறுகையில், மைக்கேல் ஜாக்சன் புகழ்பெற்ற பெரிய மனிதர், சிறந்த பாடகர், நடன மேதை, இசையமைப்பாளர்.எனக்கு வழிகாட்டி அவர்தான். அவரது நடன ஸ்டைலைத்தான் நான் பிற்பற்றுகிறேன். அவர் மறைந்த அதிர்ச்சியில் இருந்து நான் மீளவில்லை என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

27 June 2009
தமிழ்சினிமா
வேற நியூசே கிடைக்கலியா? போரடிக்குது” என்று நீங்கள் அலுத்துக் கொண்டாலும் சரி. இன்றைய நிலவரத்தை சொல்லாமல் விட்டால் விஜய் ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதால் இந்த தகவல். வேறொன்றுமில்லை, விஜயின் 50 வது படத்தை பற்றிய தகவல்தான்! வேட்டைக்காரன் ரிலீசுக்கு பிறகுதான் தனது 50 வது படத்தை பற்றி சொல்ல முடியும்” என்று விஜய் அறிவித்தாலும், டைரக்டரை தேர்வு செய்கிற வேலையில் சுறுசுறுப்பாக இருக்கிறது அவரது மூளை. பேரரசு, ஜெயம் ராஜா, ஹரியை அடுத்து பூபதி பாண்டியனோடு முடிந்த இந்த தேடுதல் வேட்டை, திருப்தியுறாமல் மீண்டும் தொடர ஆரம்பித்திருக்கிறது. இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறாராம் கே.வி.ஆனந்த்.

26 June 2009
தமிழ்சினிமா
உரிச்சு உரிச்சு காமிக்கிறாங்களே தவிர, உருப்படியா நடிக்க விடுறதில்லையே? நமீதாவின் நெடுநாள் ஏக்கம் இது. இந்த ஏக்கத்தை போக்க வந்திருக்கிறது அழகான பொண்ணுதான் திரைப்படம். “படத்தை மொத்தம் 50 நாளில் எடுத்தோம். அதிலே 35 நாட்கள் நமீதா நடிச்சிருக்காங்க” என்றார் படத்தின் இயக்குனர் திரு. எந்த அழகான பொண்ணை பார்த்தாலும், நம்மையறியாமல் ஒரு ஏக்கம் வரும். லேசா காதலும் வரும். இந்த படத்திலேயும் நமீதாவை பார்த்தவுடன் ஹீரோவுக்கு காதல் வருது. ஆனால் ஒரு பிரச்சனை. என்னன்னா…? அந்த பையனை விட நமீதாவுக்கு வயசு அதிகம். இப்படி முறைசாரா காதலை மையப்படுத்தி படங்கள் வந்திருக்கலாம். ஆனால், இந்த படத்தில் இன்னொரு விஷயம் என்னன்னா சுமாரான பையன் சூப்பர் பெண்ணை (பொம்பளையை?) காதலிக்கிறதுதான்.தன்னை விட வயதில் குறைந்த ஒருவன் தன்னை ஒருதலையாக காதலிப்பதை அறிகிற அவள், அந்த காதலை ஏற்றுக் கொண்டாளா? அல்லது அட்வைஸ் பண்ணி திருத்தினாளா? என்பதுதான் க்ளைமாக்ஸ்!

26 June 2009
தமிழ்சினிமா
மகனின் இறப்பு, நயன்தாராவுடனான ரகசிய திருமண சர்ச்சை என பட்டக்காலிலேயே பட்டாலும், பதட்டமாகவில்லை பிரபுதேவா. ஒட்டுமொத்த பக்குவத்தையும் குத்தகைக்கு எடுத்ததுபோல அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்துகிறார். பிரபுதேவாவுக்கு டான்ஸாடதான் தெரியும், நடிக்கத்தான் தெரியும் என அவரது திறமையை சுருக்கி பார்த்துக் கொண்டிருந்தபோதே, இயக்குனர் அவதாரம் எடுத்து முதல்படத்திலேயே முத்திரை பதித்தார். சித்தார்த்-த்ரிஷா நடித்த ‘நு ஒஸ்தானன்டே நா ஒத்தன்டானா’ தெலுங்கு படம்தான் பிரபுதேவா இயக்கிய முதல் படம். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ‘பவுர்ணமி’ படத்தை இயக்கிய பிரபுதேவா தமிழிலும் ‘போக்கிரி’, ‘வில்லு’ இந்தியில் ‘வான்டட்’ என பல மொழிகளிலும் ஆக்ஷ்ன்-கட் சொல்ல ஆரம்பித்துவிட்டார். இன்னொரு பெரும் பொறுப்பையும் தூக்கி சுமக்க ஆயத்தமாகிவிட்டார் பிரபுதேவா. அதாவது முதலாளியாகிறார். சித்தார்த் நடிக்கும் தெலுங்கு படம்மூலம் தயாரி்பபாளராகிறாராம் பிரபுதேவா. அப்படத்தை அவரே இயக்கவும் உள்ளார். படத்தின் பெயர், நாயகி இன்னும் முடிவாகாத நிலையில் நவம்பர் மாதம் இப்படத்தை தொடங்குகிறார் பிரபுதேவா.
26 June 2009
தமிழ்சினிமா
தொல்பொருள் ஆராய்ச்சியெல்லாம்கூட ரொம்ப சுலபம்தான். விஜய்யின் 50-வது பட இயக்குனர் யார்? என்று ரசிகர்கள் துளைத்தெடுத்த கேள்விக்கு விடை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமாக படவில்லை. இந்நிலையில் இந்த ரகசியம் உடைந்துவிட்டது. விஜய்யின் 49-வது படமான ‘வேட்டைக்காரனை’ இயக்கிவருகிறார் பாபுசிவன். இவரைப்பற்றி எந்த மீடியாவும் கண்டு கொள்ளாத நிலையில் 50-வது படத்தை இயக்கப்போவது யாரென்ற ஆர்வமே ரசிகர்களிடமும் மீடியாக்களிடமும் இருந்தது. பிறந்தநாள் பிரஸ்மீட்டில்கூட இதுபற்றி சொல்லாமல் நழுவினார் விஜய். முறைப்படியாக அறிவிப்பு வெளிவரும்வரை காத்திருங்கள்’ என்றார் விஜய். ம்ஹூம் யாரும் காதில் வாங்குவதாயில்லை. 50-வது படத்தை இயக்கப்போவது எஸ்.பி.ராஜ்குமார். ‘பொன்மனம்’ உள்ளிட்ட பிரபு படங்கள் சிலவற்றை இயக்கிய இவர், தற்போது ஆர்.கே.நடிக்கும் ‘அழகர் மலை’ படத்தை இயக்கியுள்ளார். 50-வது படத்துக்கு அனேகமாக ‘உரிமைக்குரல்’ பெயர் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஜோடியாக தமன்னா நடிக்க, மீண்டும் விஜய்யுடன் கைக்கோர்க்கிறார் வடிவேலு. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், நட்சத்திர தேர்வும் நடந்துவரும் இப்படத்தை சங்கிலிமுருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.
22 June 2009
தமிழ்சினிமா
தமிழ் திரையுலகில் இளையதளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்கு இன்று 36-வது பிறந்தநாள். இந்த பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்விப் பயிற்சி மையங்களைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய்.அடுத்த ஆண்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் அரசியல் இயக்கத்துக்கு அச்சாரமாக இந்த நற்பணிகளைச் செய்யவிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இன்றைய பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மற்றும் சாலிகிராமம் அருணாச்சலா சாலையில் இரு கம்ப்யூட்டர் மையங்களைத் திறந்து வைத்தார் விஜய். இவை தவிர தமிழகம் முழுவதிலும் இது போன்ற கல்வி மையங்களைத் திறக்கவிருப்பதாகவும் கூறினார் விஜய். பின்னர் வடபழனியில் உள்ள அவரது ஜே.எஸ்.கல்யாண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை விஜய் தொடங்கி வைத்தார். 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். விழாவில் 100 ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.

20 June 2009
தமிழ்சினிமா
சில தினங்களுக்கு முன் காணாமல்போய் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அசினின் உதவியாளர் முத்துகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை அசினால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினரால் கடத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்ட அசினின் உதவியாளர் நல்லமுத்துக்குமார் சென்னை அருகே கைது செய்யப்பட்டார். அசினிடம் டச் அப் உதவியாளராக இருந்தவர் நல்லமுத்துக்குமார். இவர் அசின் மும்பைக்கு இடம் பெயர்ந்தவுடன் அவருடன் சென்று பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முத்துக்குமாரின் தாயார் சென்னை புறநகர் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸார் அசின் தரப்பில் விசாரித்தனர். அப்போது தாங்கள் ஏற்கனவே முத்துக்குமாரை வேலையை விட்டு நீக்கி விட்டதாகவும், இப்போது அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரியாது என்றும் கூறியிருந்தனர். இதையடுத்து முத்துக்குமாரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர் குறித்து ஒரு துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சென்னை அருகே சோழவரம் பகுதியில் பதுங்கியிருந்த முத்துக்குமாரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு முத்துகுமாரை கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னரே என்ன நடந்தது என்பது தெரிய வரும்.
17 June 2009
தமிழ்சினிமா
ரத்த தானம் செய்வதற்காகவே புதிய இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளனர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள். தமிழகமெங்கும் ரத்ததானம் செய்ய விரும்பும் ரசிகர்களை ஒருங்கிணைத்து இந்த இணையதளத்தை துவக்கியுள்ளனர். www.rajiniblood.com என்ற இந்த இணைய தளத்தை நெல்லையை சேர்ந்த ரஜினி ரசிகர் தாயப்பன், சிவகாசி ரசிகர்கள் பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் துவங்கியுள்ளனர். அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவோர் தங்களுக்கு தேவைப்படும் ரத்தத்தின் வகை மற்றும் எந்த மாவட்டத்தில் தேவை என்ற விவரத்தை அதில் தெரிவித்தால் உடனடியாக ரத்ததானம் செய்பவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏராளமான ரசிகர்கள் ரத்ததானம் செய்ய பெயர்களை இதில் பதிவு செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் மூலம் தேவையான ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

17 June 2009
தமிழ்சினிமா
காதலில் விழுந்தேன் படத்திற்கு பிறகு நகுல் - சுனேனா இருவரும் இணைந்து நடித்த படம் மாசிலாமணி.
இந்தப் படம் ‘வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது’, ‘அரங்கு நிறைந்த காட்சிகள்’, ‘மக்கள் வெள்ளம் அலை மோதுகிறது’ என்று பலவிதமாக சொல்லி வருகிறது சன் பிக்சர்ஸ் குழுமம். ஆனால் படத்தின் ரிசல்ட் படு மோசமாக உள்ளது. விளம்பரப்படுத்தினால் படத்தை ஓட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த சன் பிக்சர்ஸ் தனது குழும தொலைக்காட்சிகளில் எல்லாம் நிமிடத்திற்கு ஒரு தடவை விளம்பரம் செய்ய உண்மை நிலையை சென்னை தியேட்டர்களில் காண முடிந்தது. உண்மையான ரிசல்ட் நிலை நகுலுக்குத் தெரிந்த போது ரொம்பவே ஷாக் ஆகி விட்டாராம்.
15 June 2009
தமிழ்சினிமா
எம்.ஜீ.ஆரின் பார்முலாதான் விஐய்யின் டாக்கெட் ‘வில்லு’ படத்திற்குப் பிறகு புரட்சித் தலைவரின் படத் தலைப்புக்கள் மீது கொள்ளை ஆசை ஐன்னல் வழியாக சீட்டுப்போட்டுவிட்டு பஸ்ஸ ஏறி பார்க்கும்போது உசிலை மணி கணக்கா ரெண்டு உருவம் உட்கார்ந்திருந்தால் எப்படி இருக்கும் அப்படி ஒரு நிலைமையை சந்திக்கின்றார் விஐய். எம்.ஜீ.ஆரின் பார்முலாதான் விஐய்யின் டாக்கெட் ‘வில்லு’ படத்திற்குப் பிறகு புரட்சித் தலைவரின் படத் தலைப்புக்கள் மீது கொள்ளை ஆசை கூடிவிட்டது விஐய்க்கு. எனவே, தற்போது அவர் நடித்துவரும் படத்திற்கு ‘வேட்டைக்காரன்” என் பெயரிட வேண்டும் என்பது இளைய தளபதியின் அன்புக் கட்டளைதான். இது அவரது 49-வது படம். விஐய் விரும்பிய ‘எங்க வீட்டு பிள்ளை” தலைப்பில் இப்போது பரத் நடிக்கிறார்.

14 June 2009
தமிழ்சினிமா
மஞ்சள் வெயில் படத்தில் சந்தியா முத்தக் காட்சியில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்தச் செய்திகளுக்கு இதன் இயக்குநரே காரணகர்த்தா ஆவார்.இந்த செய்தி வெளியானதும் ‘சந்தியா முத்தக் காட்சியில் நடித்தாரா?’ என ஆச்சரியம் தாங்காமல் சில நடிகர் - நடிகைகள் அவருக்கு போன் போட்டு ‘முத்தம் எப்படி இருந்தது?’ என்ற பாணியில் நலம் விசாரிக்க பதறிப்போய் விட்டார் சந்தியா. ஒவ்வொருவரிடமும் ‘நான் அந்த காட்சியில் நடிக்கவில்லை… அந்தப் படத்தில் முத்தக் காட்சிகள் எதுவும் இல்லை…’ என்று சொல்லி சொல்லி அவருக்கு தொண்டை தண்ணீர் வற்றிவிட்டது.
இதற்கு மேல் தாங்கிக் கொள்ள முடியாது என்ற நிலையில் சந்தியா போனை போட்டு ‘ஏன் இப்படி ஒரு செய்தியைக் கொடுத்தீர்கள்’ என்று இயக்குநரை வாட்டி வதக்கிவிட்டார். இந்தச் சர்ச்சைக்குப் பின்னர் சந்தியாவிடம் புதிதாக கதை சொல்லப் போன இயக்குநர் ஒருவர்‘முத்தக்காட்சி இந்தப் படத்தில் இருக்கிறது’ என்று சொல்ல விட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்திருக்கிறார் சந்தியா.
முத்தம் என்றால் எதற்காக இப்படிப் பயப்படுகிறார்களோ!
13 June 2009
தமிழ்சினிமா
விட்டா உச்சி மாநாட்டை கூட்டி, நச்சுன்னு நச்சுன்னு விவாதிப்பாங்க போலிருக்கு. அப்பவும் ஒரு முடிவுக்கு வருவாங்களாங்கறதுதான் டவுட்!வர்ற செய்திகளையும் நம்பறதா வேணாமான்னு ஒரே குழப்பம். அஜீத்தோட ஐம்பதாவது படத்தை சீமான் இயக்குறாரு தெரியுமான்னு பீதியை கிளப்புறாங்க. இந்த பக்கம் திரும்பினா, விஜயோட ஐம்பதாவது படத்தை பேரரசு இயக்கலே தெரியுமான்னு நிம்மதிக்கு உத்தரவாதம் தர்றாங்க. என்னதான் நடக்குது கோடம்பாக்கத்திலே?முதல்ல தல மேட்டருக்கு வருவோம். நீண்ட காலமாகவே தயாரிப்பாளர் தாணு, அஜீத்திடம் கால்ஷீட் கேட்பதாக தகவல். இந்த நேரத்திலே சீமானும் தாணுவிடம் ஒரு கதை சொன்னாராம். கதை பிடித்திருந்ததால் ‘விக்ரம், அல்லது அஜீத்துடன் பேசுறேன்’ என்றாராம் தாணு. அதற்குள் அஜீத்தின் ஐம்பதாவது படத்தை சீமான் இயக்குகிறார் என்று செய்திகள் கசிய துவங்கிவிட்டது. ஒரு சிங்கிள் பைசா கூட இன்னும் யாருக்கும் கைமாற வில்லை என்கிறது கோடம்பாக்கத்து பட்சி.

13 June 2009
தமிழ்சினிமா
கவர்ச்சி உடையிலோ நீச்சல் உடையிலோ நடிகைகள் நடிக்கும் போது படப்பிடிப்பில் உள்ளவர்களோ மூட் ஆகி விடும் போது படப்பிடிப்பை பார்க்க வந்த பொதுஜனம் சும்மா இருக்குமா?ஜெனிலியா நடிக்கும் இந்திப் படத்தின் படப்பிடிப்பு மும்பை கடற்கரையில் நடந்தது. படப்பிடிப்பைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். ஜெனிலியா மிகச் சிறிய குட்டைப் பாவாடையும் மெல்லிய பிராவும் அணிந்திருந்தார். ரசிகர்கள் ஜெனிலியாவை கிண்டல் செய்து கொண்டே இருந்தனர். கவர்ச்சி உடையில் ஜெனிலியாவைப் பார்த்த அவர்கள் ஜெனிலியாவை நெருங்கி அவருடைய அங்கங்களை மிகவும் கேவலமாக வருணித்துக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் ஜெனிலியாவின் கையை பிடித்து இழுத்தனர். ஜெனிலியா ஓடிப்போய் காரில் ஒளிந்து கொண்டார். விடுவார்களா நம் ரசிகர்கள் காரைச் சுற்றிலும் நின்று கலாட்டா செய்தனர்.

10 June 2009
தமிழ்சினிமா
நடிப்பில் மட்டுமல்ல… அரசியல் பேசுவதிலும் தனக்கு குரு ரஜினிதான் என்று முடிவே செய்துவிட்டார் போலிருக்கிறது விஜய்.அரசியலில் தனது அடுத்த கட்டம் என்னவென்பதை ஆலோசிக்கவும், ரசிகர்களின் பணிகள் குறித்து பேசவும் நேற்று ஞாயிற்றுக் கிழமை ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் விஜய். சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான கல்யாண மண்டபங்களில் ஒன்றில்தான் இந்த கூட்டம் நீ…ண்ட நேரம் நடந்தது.இந்தக் கூட்டத்தில் விஜய் எடுத்த எடுப்பிலேயே பயன்படுத்திய வசனம்… ஸாரிங்ணா பஞ்ச் வசனம் இது:நேற்றைய தொண்டன் இன்றைய தலைவன், இன்றைய தொண்டன் நாளைய தலைவன்… இதை மனதில் வச்சிக்கிட்டு செயல்படணும். உங்களால எனக்கு பெருமை கிடைக்கணும்… என்னால உங்களுக்கு பெருமையும் இருக்கும், எதிர்காலத்துக்கு உத்தராவாதமும் இருக்கும்’ என ஏகத்துக்கும் ஏற்றிவிட, ஐயனார் கோயிலில் மந்திரித்து விட்டவர்கள் மாதிரி முறுக்கோடு வெளியில் வந்தனர் விஜய்யின் ரசிகர்கள்.

10 June 2009
தமிழ்சினிமா
தமிழில் நான் நடிக்க மறுப்பதாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை. நிச்சயம் நான் தமிழில் நடிக்க தயார். ஆனால் அதற்கு நல்ல கதை வேண்டும் என்கிறார் அசின்.இந்தியில் கஜினி பெற்ற பெரும் வெற்றியால் நிரந்தர மும்பைவாசியாகிவிட்ட அசின், எப்போதாவது ஒரு முறை அதுவும் அவசியம் இருந்தால் மட்டுமே சென்னைக்கு வருகிறார். சமீபத்தில் கமலுடன் நடிக்கும் 19 ஸ்டெப்ஸ் படத்தில் நடிக்க சென்னை வந்தார். பின்னர் நிருபர்களிடம் பேசினார்.லண்டன் ட்ரீம்ஸ் இந்திப் படத்துக்குப் பிறகு மேலும் இரு இந்திப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும், இந்த 19 ஸ்டெப்ஸ் மட்டுமே தான் இப்போதைக்கு நடிக்கும் தமிழ்ப்படம் என்றும் அவர் கூறினார்.

5 June 2009
தமிழ்சினிமா
பிரபல திரைப்பட நடிகர் ஜெயம் ரவியின் திருமணம் இன்று காலை நடைபெற்றது.பிரபல பட தயாரிப்பாளர் எடிட்டர் மோகனின் மகனான நடிகர் ஜெயம் ரவிக்கும், தயாரிப்பாளர்கள் விஜயகுமார் மற்றும் சுஜாதா விஜயகுமார் தம்பதி மகளான ஆர்த்திக்கும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு திருமண வைபவம் தொடங்கியது. 8.46 மணிக்கு ஜெயம் ரவி மணமகள் ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டினார்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி செல்வம், பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினர்.சுந்தர்.சி. தனது மனைவி குஷ்புவோடு வந்திருந்தார். அதே போல நடிகர் அப்பாசும் தனது மனைவியோடு வந்து வாழ்த்து தெரிவித்தார்.
