30 September 2009
செய்திகள்
கண்டி ரங்கலைப் பகுதியில் ஆட்டோ சாரதியொருவர்மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின்பேரில் பொலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக ரங்கலைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். ரங்கலைப் பகுதியில் மது அருந்திவிட்டு ஆட்டோ சாரதியொருவரைத் தாக்கியதாக இந்த பொலிஸ் கான்ஸ்டபிள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த ஆட்டோ சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கான்ஸ்டபிள் கொழும்பு பொரளைப் பொலீஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
30 September 2009
செய்திகள்
ஆயுத விற்பனை இடம்பெறுவதாக கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார் மொடல் 85ஒடோநெல் ரகத்தைச்சேர்ந்த இத்தாலி நாட்டு தயாரிப்பான 8மிமீற்றர் பிஸ்டல் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இதேவேளை கட்டுகஸ்தோட்டை மடவலசாலையில் வைத்து சந்தேகநபர் ஒருவரை குருதுவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்தும் திருடப்பட்ட பெருந்தொகையான பொருட்கள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவற்றுள் 59-0188 இலக்கமுடைய டொயோட்டோ வான் 5லப்டொப் 13கையடக்க தொலைபேசிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
30 September 2009
செய்திகள்
யுத்தம் காரணமாக இலங்கையின் வடபகுதியில் இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் அப்பாவி பொதுமக்களை துரிதகதியில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகளுக்கான பொதுச்செயலாளர் பான் கீமூன் இலங்கை அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்தில் இலங்கை பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவுடன் நடைபெற்ற சந்திப்பின்போது பான் கீமூன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பருவப் பெயர்ச்சி மழைக்காலம் ஆரம்பமாவதற்கு முன்னர் அகதிமுகாம் மக்களை வேறுஇடங்களுக்கு இடம்நகர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதென அவர் தெரிவித்துள்ளார். அகதிமுகாம் நிலவரம், அரசியல் தீர்வுத்திட்டம், புனர்வாழ்வு, உரிமைமீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணை போன்ற விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மெனிக்பாம் முகாமில் அண்மையில் இடம்பெற்ற முறுகல்நிலை குறித்தும் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு மக்களின் நன்மதிப்பை வென்றெடுப்பது மிகவும் அவசியமானதென பான் கீமூன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த காலத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச் சார்பற்ற சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்து அகதிகளையும் மீள்குடியேற்ற முடியும் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க உறுதியளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
30 September 2009
செய்திகள்
புத்தளம் மாவட்டத்தில் 150காசநோயாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அப்பிரதேசத்தை மையமாக கொண்டு செயற்படும் காசநோய் திணைக்களம் தெரிவித்துள்ளது புத்தளம் மாவட்டத்தில் 9காசநோய் பிரிவுகள் காணப்படுகின்றன குறிப்பாக தங்கொட்டுவ, சிலாபம், புத்தளம் போன்ற பகுதிகளிலேயே காசநோயாளிகள் அதிகம் இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவி;த்தார் உட்சுவாசத்தின் போது செல்லும் காற்றுடன் பற்றீரியா சேர்வதால் காசநோய் ஏற்படலாம் அதேவேளை மதுபாவனை புகைத்தல், தூசுகள் மூலமும் இந்த நோய் ஏற்படலாம் என்றும் மூன்று நபர்களுக்கு ஒருவர் இந்த பற்றீரியா தொற்றுக்கு உட்பட்ட போதும் தொடர்ச்சியாக இருமல் காணப்படும் எனில் அது காசநோய் அறிகுறியாக காணப்படலாம் என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார். இவ்வாறு நோயாளர்கள் தம்மை பரிசோதித்து கொள்ள அருகிலுள்ள காசநோய் வைத்தியசாலைக்கு சென்று சி;கிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
30 September 2009
செய்திகள்
தென் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிடும் நிஷாந்த முத்துஹெட்டிகம தொடர்பான வழக்கு காலி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காலி பொலிஸாருக்கும் துறைமுகப் பொலிஸாருக்கும் வேட்பாளரான நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு எதிராக முன்வைத்த முறைப்பாடுகளும் இதன் போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
30 September 2009
செய்திகள்
தமது வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு தாம் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக்கோரி, அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்றுமாலை கைவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் அனுராதரபுரத்திற்கு விஜயம் செய்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்பே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த சிறைச்சாலை நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் இந்தப் பிரச்சினை குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக ஐந்து வாரகால அவகாசம்கோரி, அக்காலப்பகுதிக்குள் இந்தப் பிரச்சினைக்கு எப்படியும் முடிவுகாணப்படும் என அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுவதற்குத் தமிழ் அரசியல்கைதிகள் முன்வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி இன்று காலைமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
30 September 2009
செய்திகள்
ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் திகதி பிற்போடப்பட்டுள்ளது. இந்த மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று தமிழகத்தில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் இடம்பெற்றுள்ளது. கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ஆய்வுக் கட்டுரைகளைத் தயாரிக்க காலஅவகாசம் தேவையென தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனடிப்படையில் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்த யோசனைகளின்படி மாநாடு நடத்தும் திகதியை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டது. புதிய தீர்மானித்திற்கமைய மாநாட்டை அடுத்தவருடம் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த மாநாட்டை 2010 ஜனவரி 21ம் திகதி முதல் 24ம் திகதிவரை கோவையில் நடத்த தமிழக அரசு தீர்மானித்திருந்தது.
30 September 2009
செய்திகள்
தொழில்நுட்ப மாணவர் ஒருவரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.பி. வாஸ் குணவர்தனவின் மனைவி உட்பட 10 சந்தேகநபர்களுக்கு பிணை மறுக்கப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த தொழில்நுட்ப மாணவன் தாக்கப்பட்ட வழக்கில், இதனுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவரைப் பற்றிய விசாரணைகளைத் தொடர்ந்து நடத்துமாறும் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
30 September 2009
செய்திகள்
யுத்தம் இடம்பெற்ற பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் கப்புக்குளம் முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளிற்கு செந்தமான விமானத்தின் பாகங்களை கண்டுபிடித்துள்ளனர் புதைத்து வைக்கப்பட்டிருந்த ச-1-307 ஆளில்லா விமானத்தின் பாகங்களையும் விடுதலைப் புலிகளின் விமானத்தின் பாகங்களையும் அதிரடிப் படை 8ஆம் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர் ஆளில்லா விமானத்தின் என்ஜின் கமரா இரண்டு சிறகுகள் இரண்டு முன்பக்க சக்கரங்கள் சிறிய சக்கரம் 8 பயிற்சிக் குண்டுகள் 3 கீழ்போடும் குண்டுகள் பழுதடைந்த பாகங்களைக் கொண்ட 4 பைகள் ஒக்ஸிஜன் சிலின்டர் ஆகியவற்றை படையினர் கண்டு பிடித்துள்ளனர். படையினர் முன்னேறி வந்த சூழலில் விடுதலைப் புலிகள் இதனை புதைத்து விட்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
30 September 2009
செய்திகள்
வடமாகாணத்தின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்காக புதிய உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் இரண்டு மற்றும் மஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டையும் அமைப்பதற்கு நீதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உயர் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மஜிஸ்திரேட் நீதிமன்றமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைக்கப்படும் நீதி அமைச்சர் மலிந்த மொரகொடவின் மூலம் எதிர்வரும் நவம்பர் மாதம் இது தொடர்பான விசேட வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது எதிர்வரும் வருடத்திலிருந்து அந்த நீதிமன்றங்கள் செயற்படவுள்ளதாக நீதிஅமைச்சு தெரிவித்துள்ளது. 30வருடங்களுக்குப் பின் இப்பிரதேசத்தில் நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதி நிர்வாகத்தினை மீளாய்வு செய்யும் திட்டத்தின் கீழ் 50 புதிய நீதிமன்றங்கள் நாடு பூராகவும் அமைக்கப்பட வுள்ளதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது
29 September 2009
குறுஞ்செய்தி, செய்திகள்
கண்டி மந்தாரகம பிரதேசத்தின் பீதுறுகாலதால மலைத்தொடரில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்டுத்தீ நேற்றிரவு பரவத் தொடங்கியதாகவும் இதனால் 15ஏக்கர் வரை தீக்கிரையாகியுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நுவரெலியா மாவட்ட தீயணைக்கும் படையினர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஜீ.பி.ஜீ குமாரசிறி தெரிவித்துள்ளார்.
29 September 2009
செய்திகள்
புலிகள் இயக்கம் தமது கடல்புலிகள் பிரிவை பலப்படுத்துவதற்காக உக்ரைன் நாட்டு நிபுணர்களை வன்னிக்கு அழைத்திருந்தனர் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன என்று பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. 2002 மற்றும் 2004 சமாதான காலத்தில் உக்ரைன் நாட்டு நிபுணர்கள் வன்னிக்கு வந்து கடற்புலிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார்கள் என்று பாதுகாப்புதரப்புத் தெரிவித்துள்ளது. தற்சமயம் தடுத்துவைத்து விசாரணை செய்யப்படும் புலிகளின் சிரேஷ்ட தலைவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் இந்த நிபுணர்கள் வருகை விடயத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது என்றும் பாதுகாப்புத்தரப்புக் கூறியுள்ளது. வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் அரசாங்கத்தின் கடற்படையை முடக்க புலிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கிழக்குமாகாணம் மீட்கப்பட்டதன் காரணமாக புலிகளின் திட்டம் தோல்வியில் முடிந்தது என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்கு நாடுகளில் இருந்து எடுத்துவந்த இயந்திர சாதனங்கள் பின்னர் படையினரின் நடவடிக்கையின் போது வன்னயில் மீட்கப்பட்டன என்று கடற்படை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இதேவேளை ஜப்பானிய நிபுணர்கள் வன்னிக்கு வந்து புலிகளுக்கு பயிற்சி அளித்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது தெரிந்ததே.
29 September 2009
குறுஞ்செய்தி, செய்திகள்
யால சரணாலயத்தின் புத்தள ஓக்கம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் தகவல் ஒன்றின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட இவர்கள் ஐவரும் பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்படும் போது இவர்களிடம் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களும் நீச்சல் உடைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
29 September 2009
செய்திகள்
பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. பிரதம நீதியரசர் அசோக என்.டீ சில்வா வெளிநாடொன்றுக்கு சென்றிருப்பதால் பதில் பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் அனுஸ தல்பிட்ட தெரிவித்துள்ளார். இதற்கமைய பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
29 September 2009
செய்திகள்
ஆபாச சீ.டி.க்களை தயாரித்தார் என்ற குற்றச்சாட்டில் ஜேர்மனிய பிரஜையொருவரை மாத்தறை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர் விஸா காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியிருந்த இவர் ஹக்மன பகுதியிலுள்ள பெண்ணெருவரை திருமணம் செய்துள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது இவர் ஆபாச சீ.டிக்களை விற்பனை செய்வதை வழமையாகக் கொண்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஆபாச சீ.டி.க்களை தயாரிப்பதற்கு இவருக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
29 September 2009
செய்திகள்
புலிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பரா வெளிச்சக்குண்டுகள் இரண்டை தாம் இன்றுகாலையில் கலகெடிஹெனா நிட்டம்புவவில் கண்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க கூறியுள்ளார் இவை இப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணறு ஒன்றினுள் மறைத்து வைத்திருந்ததாக கூறும் அவர் அவை எதிரிகளை கண்டதும் சைகை காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும் என்றும் கூறினார். இந்த பாழடைந்த கிணறை அப்பகுதி மக்கள் துப்பரவு செய்தபோது இவை கண்டுபிடிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது இவ்வகையான வெளிச்சக்குண்டுகளை தரையில் பிடித்திருந்தால் வானில் இருந்து விமானம் மூலம் அந்த இலக்கை தாக்க ஏதுவாக இருக்கும் பொதுவாக விடுதலைப்புலிகளின் விமானங்கள் கொழும்பு வான்பரப்பில் நுழைந்ததும் மின்சாரம் துண்டிப்பது வழக்கமான விடயம் அந்தவேளையில் பரா வெளிச்சக்குண்டை நிலத்தில் நிற்பவர் இயக்கினால் இந்த இலக்கை இலகுவாக தாக்கமுடியும் இதன்தேவைக்கருதி புலிகளால் கொழும்பிற்குள் இவை கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
29 September 2009
செய்திகள்
போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள 300000 தமிழ் அகதிகளுக்கு இந்திய தமிழ் கிறிஸ்தவர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தள்ளனர் இலங்கை அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தத்தால் பல கிறிஸ்தவர்களை உள்ளடங்கிய பொதுமக்கள் இன்று முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்திய தமிழ் கிறிஸ்தவர்கள் கோரியுள்ளனர் இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் உணவுப் பற்றாக்குறை நீர்ப்பற்றாக்குறை சுகாதாரக் குறைவு ஆகியவற்றுக்கு முகம் கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
29 September 2009
குறுஞ்செய்தி, செய்திகள்
தங்கும் விடுதியொன்றில் உட்கொண்ட உணவு விசமாகியதன் காரணத்தினால் சுமார் 40பேர் கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஏழுபேர் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டதாகவும் மிகுதியினர் இன்று அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
29 September 2009
குறுஞ்செய்தி, செய்திகள்
வன்னி, கனகராயன்குளத்தில் ஞாயிற்றுக்கிழi அன்று புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பொலீஸ் நிலையத்தை பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண திறந்து வைத்துள்ளார். மாங்குளத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தையும் அவர் வைபவரீதியாகத் திறந்து வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
29 September 2009
செய்திகள்
கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு 18ம் கட்டைப் பிரதேசத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலீஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க பொலீசார் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க பொலீஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இவர் தனது கடமையின்போதே உயிரிழந்துள்ளதாகவும், இவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென்றும் கட்டுநாயக்க பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இதனைக் கண்டறிவதற்கென சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.