31 October 2009
செய்திகள்
அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் உத்துல் பிறேமரட்ண பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர் கங்கொடவில நீதிமன்றத்திற்கு அருகாமையில் ஊடகவியலாளர்களை சந்தித்தார். மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் ஜனநாயகத்தை அழிக்க முற்படுகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அராஜகநிலை தொடரும் பட்சத்தில் நாடளாவிய ரீதியிலான மாணவ சமூகத்தின் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் எச்சரித்துள்ளார். நாவின்ன தேசிய வைத்திய அமைச்சின் காரியாலயத்தினுள் சட்டவிரோதமாக நுழைந்தமை, அங்குள்ள பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின்கீழ் இவர் கடந்த 17ம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.
31 October 2009
செய்திகள்
புலிகளுக்கு அதிநவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளை வழங்கிய சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டு வந்த மாணிக்கவாசகன் என்பவர் கனேடிய புலனாய்வுப் பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகன் என அழைக்கப்படும் இவர் புலிகளுக்கு ஜீ.ஜீ.எவ் உபகரணங்கைளும், செயற்கைக்கோள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய நூறு தொலைத் தொடர்பு கருவிகளையும் வழங்கியதாக கூறப்படுகின்றது. முன்னதாக இக்கருவிகளை தனது பிரயாணப் பைக்குள் மறைத்து வைத்து இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார் என்று கூறப்படும் அந்தேரினிப்பிள்ளை ஜெயராஜ் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர் கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இவரை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
31 October 2009
செய்திகள்
முன்னைநாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் நிறைவேற்று அதிகாரமுறையின் காரணமாகவே பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடிந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதென்பது மரமுந்திரிகை சாப்பிடுவது போன்ற சுலபமாக காரியமல்ல என ஊடக அமைச்சர் யாப்பா தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரமுறையை பயன்படுத்தியே பயங்கரவாதம் இல்லாதொழிக்கப் பட்டதாகவும் அதனை எவரும் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நிறைவேற்று அதிகாரமுறையை இல்லாதொழிக்குமாறு கோருவது ஓர் கண்கட்டிவித்தை எனவும் இது ஒரு கற்பனையான கோரிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறு நிறைவேற்று அதிகாரமுறையை இ;ல்லாதொழித்தால் தற்போது காணப்படும் தேர்தல் முறையிலும் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
31 October 2009
செய்திகள்
கொழும்பு, பம்பலப்பிட்டி கடலில் நேற்றுமாலை இளைஞரொருவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்துள்ளார். குறித்த இளைஞனை பொல்லினால் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவரையும் உடனடியாக கைதுசெய்து தடுப்புக்காவலில் வைக்குமாறு தான் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மெத்திவக்க கூறியுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் எவராகவிருப்பினும் கைதுசெய்யப்படும் அதேவேளை, பொலிசாராயிருந்தாலும் பக்கச்சார்பின்றி உரிய சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பம்பலப்பிட்டி கரையோரத்திலிருந்த இளைஞரொருவர் நேற்றுக்காலை முதல் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மற்றும் ரயில்கள்மீது கற்களை எறிந்து வந்ததாக கூறப்படுகிறது. இறுதியாக ரயில் ஒன்றின்மீது குறித்த இளைஞன் கற்களை வீசி எறிந்தபோது அங்கிருந்தவர்கள் கூடி அவனை நையப்புடைத்துள்ளனர். அதனையடுத்து கரையோரத்தில் சனக்கூட்டம் அதிகமாகவே அங்கிருந்த ஒருவரினால் இச்சம்பவம் வீடியோ படமாக்கப்பட்டுள்ளது. அதில் சிலர் கடலுக்குள் வைத்து குறித்த இளைஞனை பொல்லினால் தாக்க முயற்சிப்பதாயும் சிறிது நேரத்தில் அவன் உயிரிழந்த நிலையில் கடலுக்குள் தாழ்ந்து செல்வதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. உண்மையில் இளைஞன் பொதுமக்களினால் கரையில் வைத்து தாக்கப்படும் போது தவறி கடலுக்குள் விழுந்தானா? அல்லது சம்பவ இடத்துக்கு விரைந்த பம்பலப்பிட்டி பொலிஸார் அவனை கைது செய்ய முற்பட்டவேளை தான் தப்புவதற்காக கடலுக்குள் குதித்தானா? என்பது குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மெத்திவக்க தெரிவித்துள்ளார். உயிரிழந்த இளைஞன் புத்தி சுவாதீனமற்றவன் எனத் தகவல்கள் கிடைத்துள்ளமையால் அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனக்கூறிய பொலிஸ் பேச்சாளர், இளைஞன் பொல்லினால் தாக்குண்டதினால் தான் கொல்லப்பட்டானா என்பது குறித்தும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
31 October 2009
செய்திகள்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதன்மூலம் எதிர்க்கட்சிகள் நாட்டைப் பலவீனப்படுத்துவதற்கான மற்றுமொரு சதித்திட்டத்தை ஆரம்பித்துள்ளன என்று அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இவ்வாறு தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்குமாறு எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியிருக்கின்றமை நாட்டைப் பலவீனப்படுத்தும் சதியின் ஆரம்ப முயற்சியாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறைமையே பெருமளவுக்கு உதவியது. எதிர்க்கட்சிகளின் இந்தத் தந்திரோபாயம் மக்களுக்கும் அரசுக்கும் நன்குதெரியும். இதன்காரணமாக மக்களை ஏமாற்ற முடியாது. சர்வதேச நாணய நிதியம், மனித உரிமைக் கவுன்ஸில் போன்றவற்றுக்குத் தகவல்களை வழங்கி நாட்டைப் பலவீனப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகள் ஏற்கனவே தோற்றுவிட்டன. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான யோசனை இந்த நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டவேளை, ஐ.தே.கட்சியனர் அந்த யோசனைகளைத் தீயிட்டுக் கொழுத்தினர். புலிகள் தனியான தேசமொன்றுக்கு உரித்தானவர்கள் என்ற எண்ணம் உருவாவதற்கு வழிவகுத்த நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய யுத்தநிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ஐ.தே.கவினர் தற்போதைய இராணுவ வெற்றிகள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கின்றனர். ஐ.தே.கட்சி அன்று உருவாக்கிய நிலைமையை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே மாற்றியமைத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
30 October 2009
செய்திகள்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல முன்னாள் சர்வதேச கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்ட் மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலம் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று உயிரிழந்துள்ளார். 68 வயதான டேவிட் ஷெப்பர்ட் 1983ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு ரை 172 ஒருநாள் போட்டி மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியுள்ளார். இதில் 3 உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டமும் அடங்கும். 282 முதல்தர போட்டியில் விளையாடியுள்ள ஷெப்பர்ட் 1981ம் ஆண்டில் முதல்தர போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்டார். 2005ம் ஆண்டில் சர்வதேச நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
30 October 2009
குறுஞ்செய்தி, செய்திகள்
வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து தென்மராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த 641 குடும்பங்களைச் சேர்ந்த 2,088பேர் நேற்றையதினம் சாவகச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட இவர்கள் நேற்று இரவிரவாக அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக குடும்பம் ஒன்றுக்கு 5,000 ரூபாவும் இரவு உணவும் வழங்கப்பட்டிருந்தன.
30 October 2009
செய்திகள்
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்டம் ஆகியவற்றை நீக்கமுடியாதென இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது குறித்த இரண்டு சட்டங்களையும் உடனடியாக நீக்குமாறு தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே இலங்கை இந்த பதிலை அறிவித்துள்ளது மேலும் இந்த வேண்டுகோளை தற்போது ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் இடைதங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க கோரியுள்ளதாகவும் அவசரப்பட்டு அவர்களை குடியேற்ற முடியாதெனவும் பாதுகாப்பு கருதி அவர்களை வரிசைக்கிரமாகவே குடியேற்ற முடியுமெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
30 October 2009
செய்திகள்
தென் மாகாணசபை முதலமைச்சராக ஷான் விஜயலால் டீ சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்றுகாலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஏற்கனவே தென்மாகாண சபை முதலமைச்சராகக் கடமையாற்றிய ஷான் விஜயலால் டீ சில்வா இம்முறை தேர்தலில் காலி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட அவருக்கு தொண்ணூறாயிரத்து இருநூற்று தொண்ணூற்று நான்கு வாக்குகள் கிடைத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
30 October 2009
குறுஞ்செய்தி, செய்திகள்
இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மற்றும் அனைத்துத் தமிழர்களுக்கும் கௌரவமான வாழ்க்கைச் சூழல் உருவாக்கப்பட வேண்டுமென அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் செயற்குழுவினால் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
30 October 2009
செய்திகள்
பொலநறுவை சோமாவதி பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மகாவலிகங்கைக்கு அருகில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். இவர்கள் கைதுசெய்யப்பட்டபோது இவர்கள் வசமிருந்த மண்வெட்டி, அலவாங்கி, உள்ளிட்ட உபகரணங்களும், பூஜைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 October 2009
செய்திகள்
வவுனியாவை சூழவுள்ள பகுதியில் மக்களிடமும் வர்த்தகர்களிடமும் கப்பம் பெற்றதாக தெரிவிக்கப்படும் 6சந்தேக நபர்களை வவுனியா குற்றப்புலனாய்வுப்பிரிவினர் கைதுசெய்துள்ளனர் வவுனியாப்பகுதியில் இடம்பெற்ற வழிப்பறிக்கொள்ளை மற்றும் இரட்டைக்கொலை உள்ளிட்ட மேலும் ஒருகொலைசம்பவத்துடன் இந்த சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென வவுனியா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் இவர்கள் குறித்து கடந்த 2006ம் ஆண்டுதொடக்கம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் கப்பம்பெறுதல் உள்ளிட்ட சுமார் 60சம்பவங்கள் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது இவர்கள் வவுனியா பொலிஸாரின் தலைமையின் கீழ் செயற்படும் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் தடுத்துவைக்குமாறு விடுவிக்கப்பட்ட உத்தரவின்பேரில் இவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 October 2009
செய்திகள்
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்தபோகொல்லாகம உள்ளிட்ட குழுவினர் நேபாளத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விஜயத்தின்போது நேபாள ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
30 October 2009
செய்திகள்
கொழும்பு பம்பலப்பிட்டி பொலீஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள கடலில் ஒருவர் மற்றொருவரால் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட சம்பவமொன்று பலர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. மூழ்கடிக்கப்பட்டவர் வழமையாக அப்பகுதியால் போகும் வரும் ரயில்களுக்கும் வாகனங்களுக்கும் கல்வீச்சு நடத்தி வருபவர் என்பதுடன் அவர் சற்ற மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. இன்றுகாலை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கும் கல்லெறிந்துவிட்டு கடலில் குதித்துள்ளநிலையில் கடலில் வைத்து ஒருவர் தடியால் அடித்து அவரை மூழ்கடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
30 October 2009
செய்திகள்
இன, மத, கட்சி பேதமின்றி மக்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்யும் மக்கள் சேவையில் தாம் ஈடுபடப் போவதாக வவுனியா நகரசபையில் அங்கம் வகிக்கும் சகல கட்சிப்பிரதிநிதிகளும் நேற்றைய முதலாவது அமர்வில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளனர். வவுனியா நகரசபையின் முதலாவது அமர்வானது நேற்றுக்காலை 10மணியளவில் சபா மண்டபத்தில் நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி நாதன் தலைமையில் நடைபெற்றது. 11உறுப்பினர்களைக் கொண்ட இந்நகரசபையின் முதலாவது அமர்வில் மூவினத்தையும் சேர்ந்த கட்சிப்பிரதிநிதிகள் அனைவரும் பிரசன்னமாகியிருந்தனர். தமிழ்க்கூட்டமைப்பினர் ஐவர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யைச் சேர்ந்த நகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட புளொட் நகரசபை உறுப்பினர்கள் மூவர், பொதுசன ஐக்கிய முன்னணி இருவர், முஸ்லிம் காங்கிரஸ் ஒருவர், மக்கள் பிரதிநிதிகளாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே. இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் நகரசபை அமர்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
30 October 2009
செய்திகள்
யாழ்ப்பாணத்திலிருந்து விமானம் மூலம் கொழும்பு செல்லவிருந்த பயணிகள் நேற்று ஏ9 வீதியின் ஊடாக பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த விமானம் பழுதடைந்ததன் காரணத்தினால் அது பற்றி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. கொழும்புக்கு அவசரமாக செல்வதற்கு தயாராக இருந்தவர்களின் நன்மை கருதி விசேட பஸ் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இதற்கமைய இவர்கள் விசேட பஸ்கள் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
29 October 2009
செய்திகள்
மாத்தளை இறத்தோட்டையில் சன நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள பற்றை ஒன்றுக்குள்ளிருந்து பெண்ணின் சடலமொன்றினை பொலீசார் மீட்டுள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஒரு குழந்தையின் தாயென தெரிவிக்கப்படுகிறது. இறத்தோட்டை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட உனுட்டை ரத்தோட்டமலை குடியேற்றத் திட்டப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அயலவர்கள் தெரிவித்த தகவலையடுத்தே இறத்தோட்டை பொலீசார் மேற்படி பெண்ணின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். குறித்த பெண் கூரிய ஆயுதமொன்றினால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கணவர் வீட்டில் இல்லாத வேளையில் இப்பெண் கொல்லப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் குறித்த பெண்ணின் கணவரின் தாயார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
29 October 2009
செய்திகள்
சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 272வெளிநாட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களதினால் குறித்த நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சுற்றுலா விசாக்களின் மூலம் இலங்கைக்கு விஜயம் செய்து பின்னர் வர்த்தக அல்லது தொழில்நடவடிக்கைகளில் குறித்த நபர்கள் ஈடுபட்டுவந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இவ்வாறு விசாமோசடியில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது இவ்வாறு போலிவிஸாக்களை பயன்படுத்திய இரண்டுபேர் இன்றையதினம் வெள்ளவத்தைப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.
29 October 2009
குறுஞ்செய்தி, செய்திகள்
இலங்கை வந்துள்ள உயர்கட்டளை கற்கைநெறியை பயிலும் இந்திய இராணுவ அதிகாரிகள்குழு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பிரிகேடியர் மொனி சன்டி தலைமையில் 14 அதிகாரிகள் அடங்கிய இக்குழுவில் இந்தியாவின் இராணுவ மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் அடங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
29 October 2009
குறுஞ்செய்தி, செய்திகள்
கல்உடைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தனது தாயாருக்கு பகல் உணவு கொண்டு சென்ற 17வயது மகன் கல்உடைக்கும் இயந்திரத்தில் சிக்கி மரணமான பரிதாபகரமான சம்பவமொன்று பெந்தெரவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. பெந்தர ஹொரவல பகுதியைச் சேர்ந்த இந்திக்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்உடைக்கும் இயந்திரத்தில் சிக்கிய இளைஞன் கைகால் துண்டிக்கப்பட்டுள்ளதோடு முகத்திலும் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.