31 December 2009
செய்திகள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நேரடி விவாதத்துக்கு ஜெனரல் சரத்பொன்சேகா எந்தத் தொலைக்காட்சி முன்னும் தோன்றத் தயாராக இருப்பதாக தெரிவித்த ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க சிங்கம் சிங்கத்துடன்தான் மோதும். பன்றிக்குட்டியுடன் மோதித்தன்னை அசிங்கப்படுத்திக் கொள்ளாது எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது, கடந்த 18ம் திகதி கண்டியில் நடைபெற்ற ஜெனரல் பொன்சேகாவின் முதலாவது தேர்தல் பிரசாரமேடையில் உரையாற்றிய ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க ஜனாதிபதிக்கு பகிரங்க சவாலொன்றை விடுத்தார். முக்கிய விடயங்கள் தொடர்பாக தொலைக்காட்சியில் நேரடி விவாதத்துக்கு எமது பொதுவேட்பாளர் ஜெனரல் பொன்சேகா தயாராக இருக்கின்றார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தயாரா? என்று அழைப்பு விடுத்தார். அதற்கு இன்றுவரையில் ஜனாதிபதி பக்கமிருந்து பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்றுமுன்தினம் ஒரு பன்றிக்குட்டி ஜெனரலை விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கின்றது. பன்றிக்குட்டியுடன் மோதுவதற்கு எமது சிங்கம் முன்வராது. சிங்கம் இன்னொரு சிங்கத்துடன் தான் மோதும். பன்றியுடன் மோதி அசிங்கத்தைப் பூசிக்கொள்ள சிங்கம் தயாராக இல்லை. இப்போதும் கூறுகின்றோம் ஜெனரல் பொன்சேகா எந்நேரத்திலும் எந்தத் தொலைக்காட்சி முன்னும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பகிரங்க விவாதத்துக்குத் தயார் நிலையிலிருக்கிறார். ஜனாதிபதியே நேரத்தையும் இடத்தையும் தீர்மானிக்கட்டும். அதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம் என்று அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
31 December 2009
செய்திகள்
அரசியல் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்தபோது இந்தோனேசியாவில் கைதாகி பின்னர் நோய்வாய்ப்பட்டு மரணமான இலங்கை அகதியின் சடலம் இன்று நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வயிற்றுவலி காரணமாக அந்த நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இரண்டு நாட்களாக அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமானதாக இந்தோனேசியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் நந்தன மல்லவாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
31 December 2009
செய்திகள்
நாட்டின் சகல நீதிமன்றங்களையும் அண்மித்த பகுதிகளில் சட்ட உதவி நிலையங்களை அமைப்பதற்கு எதிர்வரும் வருடத்தில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சட்ட உதவி மற்றும் சட்ட ஆலோசனைகள் தேவைப்படும் அனைவருக்கும் விரைவாக தமது சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக சட்ட உதவி ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.எஸ்.விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
31 December 2009
செய்திகள்
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றுள்ள எனினும் தேசிய அடையாளஅட்டைகள் இல்லாத வாக்காளர்களுக்கு விசேட அடையாளஅட்டைகளை வழங்குவதற்காக கிராமசேவகர்கள் தமது அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் இருக்கவேண்டும் என்ற பணிபுரையைத் தேர்தல் ஆணையாளர் வழங்கவேண்டும் என பெப்ரல்அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் விசேட அடையாளஅட்டைகளை பெற்றுக்கொடுக்க கிராமசேவகர்கள் அலுவலகங்களில் இருக்கவேண்டும். இதற்கான பணிப்புரையை தேர்தல் ஆணையாளரே கிராம சேவகர்களுக்கு வழங்க வேண்டும் எனக்கோரி தேர்தல் ஆணையாளருக்கு பெப்ரல் அமைப்பு கடிதமொன்றையும் எழுதியுள்ளது.
31 December 2009
செய்திகள்
ஏ-9வீதி ஊடாக கடந்த நான்கு நாட்களுக்குள் 30ஆயிரம் பேர் சென்று வந்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதேபோன்று சுமார் இரண்டாயிரம் வாகனங்கள் சென்று வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏ-9 வீதி ஊடாக பொதுமக்கள் சென்றுவர தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காடினார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
31 December 2009
செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளில் ஈடுபடுவதற்கு இப்போது தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள் மற்றும் சுகாதார வசதிகள் என்பவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசஅதிபர் திருமதி எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இதேவேளை, போர்ச்சூழல் காரணமாக இடம்பெயர்ந்திருந்த கிளிநொச்சி மாவட்ட அரசசெயலகம் சுமார் 15மாதங்களின் பின்னர் அதன் சொந்தஇடத்தில் செயற்படத் தொடங்கியுள்ளது. மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரித்தப்படுத்துவதற்காக ஏனைய அரச திணைக்களங்களும் அங்கு செயற்பட்டு வருவதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்ட அரசஅதிபர் திருமதி ரூபவதி, கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்ற பணியின் முன்னேற்றத்திலேயே இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றும் பணிகளின் வேகமும் தங்கியிருப்பதாகக் கூறியுள்ளார்.
30 December 2009
செய்திகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 391 உறுப்பினர்களை கொண்டு ஆட்சி நடத்தி வருவதாக எதிர்கட்சிகளின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டிற்கு அதிக அந்நியசெலாவணியை ஈட்டிக் கொடுக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்காது 115 அமைச்சர்களும் பணம் செலவிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை 500ரூபாவாக உயர்த்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினம் அந்நியசெலாவணியை விரயமாக்கும் அமைச்சர்களின் சம்பளம் 1லட்சரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளதென அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக செயற்படும் குடும்ப அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதாக என்பது தொடர்பில் மக்கள் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் அரசாங்கம் தரகுப் பணத்தை சம்பாதித்துக் கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
30 December 2009
செய்திகள்
2010 ஜனவரி 26ல் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு உத்தியோகபூர்வமான அங்கீகாரம் 22 வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ளநிலையில், இரு பிரதான போட்டியாளர்களான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினதும் ஜெனரல் பொன்சேகாவினதும் முகாம்களுக்கிடையில் உக்கிரமான தேர்தல்சமர் எதிர்வரும் நாட்களில் வெடிப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இதற்குச் சாட்சியமாக பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வின் இரு எம்.பி.க்கள் ஆளும்தரப்பில் இணைந்து அமைச்சர் பதவியை ஏற்றுள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.யுமான அர்ஜுன ரணதுங்க ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். அதேசமயம், இரு பிரதான அணிகளிலிருந்தும் கட்சித் தாவல்கள் அடுத்துவரும் நாட்களில் அதிகரிப்பதற்கான ஊகங்களும் பரவலாக அதிகரித்துள்ளன. ஜனாதிபதி ராஜபக்ஷவும் ஜெனரல் பொன்சேகாவும் கிட்டத்தட்ட யுத்த வெற்றிக்கான புகழை பங்கிட்டுக் கொள்ளும் போட்டியையே தேர்தல் பிரசாரமேடையில் முன்னிறுத்தவதென்பது வெளிப்படையான சாட்சியாக உள்ளது.
30 December 2009
செய்திகள்
யாழ்தேவி ரயில் சேவையை ஓமந்தை வரையான குறுகிய தூரத்துக்கு நீடிக்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி ஓமந்தை வரையில் யாழ்தேவி ரயில்சேவை அடுத்த ஆண்டு ஏப்ரல்மாதம் முதல் நீடிக்கப்படும் என ரயில்சேவை பொது முகாமையாளர் பி.பி.விஜேசேகர தெரிவித்துள்ளார். இதற்காகத் தாண்டிக்குளத்திலிருந்து 10 கிலோமீற்றர் நீளமான ரயில்பாதைகளை மீளமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஓமந்தை ரயில்நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இப்பணிகள் 400மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, யாழ்தேவி ரயில்சேவையை யாழ்ப்பாணம் வரையில் நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
30 December 2009
செய்திகள்
சிறுபான்மை இனத்தவர் தேர்தலை பகிஷ்கரிப்பதோ.. தனியாக ஒருவேட்பாளரை நிறுத்துவதோ.. அர்த்தமற்ற நடவடிக்கைகளாகும் என முன்னாள் நீதியரசர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். தேர்தல் ஒன்றை பகிஷ்கரிப்பது தற்போதைய சூழ்நிலையில் பயனற்ற ஒரு நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் இந்நாட்டின் சிறுபான்மையினர் மேற்கொண்ட சகலவிதமான உரிமைப் போராட்டங்களும் யுத்தவெற்றியின் பின்னர் முறியடிக்கப்பட்டு முற்றுமுழுதாக முடுக்கி விடப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் யுத்தவெற்றியை மாத்திரமே சந்தைப்படுத்தி பேரினவாத அலையில் அரசியல் செய்ய முற்படும் பிரதான வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கோருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. உண்மைதான் பிரதான வேட்பாளர்களில் ஒருவர்தான் ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு உள்ளது ஆனால் அவருடைய தலைவிதியை ஒரு சிறுபான்மை இனத்தவாராகிய தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் இரண்டாவது விருப்பு வாக்கின் மூலம் அடையாளப்படுத்தி நிர்ணயிப்பதில் எமது ஒருமித்த உலகிற்கும் உணர்த்துகின்ற அரிய வாய்ப்பு உள்ளது. சிறுபான்மையினரது தயவு இல்லாமல் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பெரும்பான்மையை பெறமுடியாது என்பதே உண்மை! இரண்டாம் சுற்று வாக்குகளிப்பில் சிறுபான்மை இனத்தவரது இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு அதனடிப்படையில் எமது ஒருமித்த ஆதரவை பெற்ற ஒருவர் தெரிவாவது தான் எமது உரிமைப் போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்கும் ஒரே ஒரு வழியாகும்! போருக்கு பின்னரான அரசியலை சரிவரக் கையாள்வதற்கான தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் ஒருமித்த முன்னெடுப்பாக இந்த ஜனாதிபதி தேர்தலில் எமது பிரவேசம் அமைய வேண்டும். நிபந்தனையற்ற ஆதரவு, சரணாகதி அரசியல் இன்னும் பல தசாப்தங்களுக்கு சிறுபான்மை இனங்களின் உரிமைப் போராட்டங்களை பின்னடையச் செய்யும் வரலாற்றுத் தவறாகும். நீதியரசர் விக்னேஷ்வரனும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் அரசியல் இன்னும் பல தசாப்தங்களுக்கு சிறுபான்மை இனங்களின் உரிமைப் போராட்டங்களை பின்னடையச் செய்யும் வரலாற்றுத் தவறாகும்! பிரதான வேட்பாளர்களில் எவருக்கும் வாக்களிக்ககூடாது என நாம்கூறவில்லை மாறாக இரண்டாவது விருப்பு வாக்கை அவர்களில் ஒருவருக்கு வழங்குமாறு நாம் கூறுகிறோம். பிரதான வேட்பாளர்கள் யுத்தவெற்றியை தாமதமாக்கி சந்தைப்படுத்தி பேரின அரசியலை செய்யும் பொழுது சிறுபான்மை இனத்தவராகிய நாம் ஏன் நிரந்தரமான அரசியல் தீர்வை வலியுறுத்தி எமது ஒருமித்த உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க செய்ய முடியாது?????….
30 December 2009
செய்திகள்
இலங்கை இராணுவத்தினரிடம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் பகுதியில் வைத்து மண்டியிட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கு புலிகள் தொடர்ச்சியாக பல பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அவர்களின் இந்த முயற்சியானது யதார்த்தத்தை விளங்கிக் கொண்டுள்ள மக்கள் மத்தியில் எடுபடுவதாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு நேற்றையதினமும் புலிகளின் ஊடகங்களில் மீண்டுமொருமுறை முயற்சி எடுக்கப்பட்டது. பிரபாகரன் காட்டுப் பகுதியில் அஞ்சலி செலுத்துவது போன்று குறித்த புகைப்படத்தைப் பிரசுரித்திருந்தார்கள். இப்புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டதென்பதை “அதிரடி” இணையத்தினர் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்தியப்படை இலங்கையில் பிரசன்னமாயிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதமிருந்து உயிரிழந்த புலி இயக்க உறுப்பினர் திலீபனுக்கு பிரபாகரன் அஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படமே அதுவாகும். அந்தப் புகைப்படத்தை வெட்டி ஒட்டி குறித்த புகைப்படம் உருவாக்கப் பட்டுள்ளதென்பதை அதிரடி இணையம் அம்பலப்படுத்துகின்றது. இவ்வாறு மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி அவர்களின் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையைச் சீர்குலைக்க வேண்டாமென புலம்பெயர்ந்த மக்களை ஏமாற்றி புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணம், சொத்துக்களில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு “அதிரடி” இணையம் தெரிவித்துக் கொள்வதுடன், இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை படையினர் கொடுமைப்படுத்துவதற்கு வழிகோலாமல் அந்த மக்களை வாழ விடுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறது. உயிரிழந்த பிரபாகரனை உயிருடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளான அப்பாவி மக்களை மேலும் மேலும் அவல நிலைக்குத் தள்ளி விடுமென்பதை “அதிரடி” இணையத்தினர் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். ..!!!! Thanks… www.athirady.com

30 December 2009
செய்திகள்
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 06ம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன. இந்த வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் 06ம் திகதிமுதல் 18ம் திகதிவரை இடம்பெறுமென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. மேலும் விடுமுறை தினமான எதிர்வரும் 10ம் திகதி விசேட வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் இடம்பெறுமென தபால் மாஅதிபர் எம்.கே.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் விநியோக நடவடிக்கைகளுக்கு 10கோடியே 50லட்சம் ரூபாய் நிதி செலவாகுமென கணிப்பிடப்பட்டுள்ளதாகவும் தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.
30 December 2009
செய்திகள்
யுத்தத்தின்மீது அதிக நாட்டம்கொண்ட இரண்டு வேட்பாளர்களின் பகடைக்காய்களாக மக்கள் மாறக்கூடாது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவோர் யுத்தம்மீது நாட்டம் கொண்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு வேட்பாளர்களும் உலக முதலாளித்துவ வர்த்தகத்தின் பிரதிநிதிகளே என அவர் தெரிவித்துள்ளார். 12 பில்லியன் ரூபா மக்கள் செலவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருவரில் யார் மோசமானவர்கள் என்ற கேள்வி எழுப்புவதே நகைப்புரிக்குயது எனவும், இருவருமே மிகவும் மோசமானவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பயங்கரமான செஸ் அரசியல் விளையாட்டின் பகடை காய்களாக நாம் மாறிவிடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
30 December 2009
செய்திகள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாட்டில் அபிவிருத்தி துரிதகெதியில் முன்னெடுத்துச் செல்லப்படும்போது இதைவிட சிறந்த மாற்றம் தேவையென ரவூப் ஹக்கீமும் அவரது ஜனாதிபதி வேட்பாளரும் கூறுவது வேடிக்கையாகவுள்ளது என பிரதி அமைச்சர் கே.ஏ. பாயிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலையொட்டி புத்தளம்நகரில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேர்தல் பிரசாரத்துக்கு தலைமைதாங்கி உரையாற்றும்போதே பிரதியமைச்சர் பாயிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். புத்தளம் மஸ்ஜிதுல் ஹ_தா பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் பாயிஸ் மேலும் கூறியதாவது, எந்த அடிப்படையில் அந்த மாற்றம் அமையவேண்டும் என சகோதரர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கவில்லை. யுத்தம் ஒழிக்கப்பட்டு அனைத்து இனமக்களும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் வாழும் இத்தருணத்தை மாற்றம் செய்துவிட்டு மீண்டும் நாட்டில் யுத்தப் பீதியையும் அமைதியின்மையும் ஏற்படவேண்டும் என்ற மாற்றத்தை ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா? இந்நாட்டில் நிலவுகின்ற ஜனநாயகத்தையும், சுபீட்சத்தையும் குழிதோன்றிப் புதைத்துவிட்டு இராணுவ மயமான ஆட்சியை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற மாற்றத்தை ரவூப் ஹக்கீம் விரும்புகின்றாரா? என்று பாயிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
30 December 2009
செய்திகள்
யாழ்தேவி ரயில்சேவை எதிர்வரும் ஏப்ரல்முதல் ஓமந்தைவரை நீடிக்கப்படுமென ரயில்வே பொதுமுகாமையாளர் பி.பி. விஜேசேகர தெரிவித்துள்ளார். தாண்டிக்குளத்திலிருந்து ஓமந்தை வரையான 10 கிலோமீட்டர் நீளமான ரயில்பாதைகள் மீளமைக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதோடு ஓமந்தை ரயில்நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 2 தசாப்தங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் ஓமந்தைவரை பயணிக்க உள்ளதாக பொதுமுகாமையாளர் பி.பி. விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். 400 மில்லியன் ரூபாசெலவில் ரயில்பாதை புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. ஓமந்தை ரயில் நிலையத்தை மீளமைக்கும் பணிகளை பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி பொறுப்பேற்று முன்னெடுத்து வருகிறார். மோதல் காரணமாக கொழும்பிலிருந்து வவுனியா வரையே ரயில்சேவைகள் இடம்பெற்றன. புலிகளின் பிடியில் இருந்து வடபகுதி முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து வவுனியாவிலிருந்து தாண்டிக்குளம்வரை சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. 30 வருடகாலம் நீடித்த மோதல்களின்போது வவுனியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில்பாதைகள், ரயில்நிலையங்கள் என்பன புலிகளினால் நாசமாக்கப்பட்டதாகவும் ரயில் தண்டவாளங்கள் பங்கர் அமைப்பதற்காக புலிகளினால் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம்வரை ஆரம்பிக்க துரிதநடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளதையடுத்து இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே திணைக்களம் துரிதமாக முன்னெடுத்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
29 December 2009
செய்திகள்
தேசப்பற்றுள்ள தேசிய நிலையத்தின் தலைவர் தம்பர அமிலதேரர் இம்மாதம் 29ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தம்பர அமிலதேரர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டார். இது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்ததாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரத்ன தெரிவித்துள்ளார். தலங்கமை பகுதியில் வைத்தே தம்பர அமிலதேரர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தார்.
29 December 2009
செய்திகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின் நேற்றுவரை 3ஆயிரத்து 110குடும்பங்களைச் சேர்ந்த 15ஆயிரத்து 910பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் கரைச்சி பிரிவில் 4280 பேரும் 11630 பேர் பூநகரி பிரிவிலும் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள கிளிநொச்சி திட்டப்பணிப்பாளர் செட்டிகுளம் நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள 336 குடும்பங்களைச் சேர்ந்த 1010பேர் இம்மாத முடிவிற்குள் அவர்களுடைய பழைய இடங்களில் குடியமர்த்தப்படுவர் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட செயலகம் வட மாகாணசபை ஆளுநரினால் திறந்து வைக்கப்பட்டதை அடுத்து வவுனியா குருமண்காட்டில் இயங்கிவந்த கிளிநொச்சி மாவட்ட செயலகம் இம்மாதம் 30ம் திகதியுடன் மூடப்படும் என கிளிநொச்சி மாவட்ட திட்டப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகம் அரசஅதிபர் விடுதி புனரமைப்புக்கு 35மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது மத்திய பொறியியல் உசார்துணை நிறுவனம் கட்டிடவேலைகள் மேற்கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
29 December 2009
செய்திகள்
வத்திக்கானில் நத்தார் தினத்தன்று சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவு ஆராதனையின்போது பாப்பரசரை பெண்ணொருவர் கீழே தள்ளி வீழ்த்திய சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ளார். அச்செய்தியில் அவர் கூறியுள்ளதாவது, வத்திக்கானில் கடந்த 25ம் திகதி நத்தார் ஆராதனையின்போது இடம்பெற்ற சம்பவத்தின்போது பாப்பரசர் 16ம் பெனடிக்ட்டுக்கு எவ்வித காயமும் ஏற்படாதது எமக்கு நிம்மதியை தந்துள்ளது. சம்பவத்தையடுத்து எவ்வித சஞ்சலத்துக்கும் உள்ளாகாது நள்ளிரவு ஆராதனையை தொடர முடிந்ததையும் பின்னர் அவர் பாரம்பரிய நத்தார்செய்தி மற்றும் ஆசீர்வாதத்தை வழங்கியதையும் உலகளாவிய ரீதியில் தேவைப்படும் சமாதானம் மற்றும் புரிந்துணர்வின் தேவையை வலியுறுத்தியதை இட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். பாப்பரசர் தொடர்ந்தும் நற்சுகத்துடன் இருக்கவும் மத சேவையாற்றவும் வாழ்த்து தெரிவிக்கிறோம் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
29 December 2009
செய்திகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத்பொன்சேகா வெற்றியீட்டினால் நாட்டு மக்களையும் விலைக்கு விற்றுவிடுவார் என சுகாதார அமைச்சர் நிமால் சிறிபாலடிசில்வா தெரிவித்துள்ளார் ஜே.வி.பி.கட்சி சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு காட்டும் திறமையை மக்களின் நலனில் காட்டுவதில்லை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசத்தை நேசிக்கும் ஓர் தலைவர் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகா நாட்டையும் படைவீரர்களையும் காட்டிக் கொடுத்துள்ளார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சுயலாப நோக்கத்திற்காக படைவீரர்களை காட்டிக் கொடுக்கும் ஓர் இராணுவ உயரதிகாரி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டு மக்களின் நிலமை கவலைக்கிடமாக அமைந்து விடுமெனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
29 December 2009
செய்திகள்
இரத்தினபுரி பிரதேசத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று முற்பகலில் மீட்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலீசார் தெரிவித்துள்ளனர். பிரதேசவாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மீட்கப்பட்ட குறித்த சடலமானது சுமார் 60வயதுடைய ஆணொருவருடையதென பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.