எதிர்வரும் 4ம் திகதி ஜனாதிபதி பதவிப்பிரமாணம் நாடாளுமன்றம் 5ம் திகதி கலைப்பு..!

செய்திகள்

mahinda_with_jaffna_2.JPGஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 4ம் திகதி இரண்டாவது முறையாகவும் பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார் இதனை அவர் நேற்று மல்வத்து மகாநாயக்க தேரரை கண்டியில் சந்தித்த போது தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் முதலாவது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் 2011ம் அண்டு நவம்பர் மாதம் இரண்டாவது தடவையாகவும் பதவிப்பிரமாணம் செய்துக் கொள்வார் என்ற தகவல் முடிவுக்கு வந்துள்ளது. இதேவேளை நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை ஜனாதிபதி எதிர்வரும் 5ம்திகதி விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து இரண்டு வாரங்களுக்குள் தேர்தல்கள் ஆணையாளர் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்களை கோருவார் இந்நிலையில் அவசரகால சட்டவிவாதம் நடைபெற வேண்டியுள்ளதால் பெரும்பாலும் பொதுத்தேர்தல் மார்ச்மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல்மாத முதல் வாரத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டு விஜயமாக ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாகவும் அங்கு அவர் நாட்டின் அபிவிருத்திக்காக 300மி;ல்லியன் கடன்உதவி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

வெலிகந்த முகாமில் இருந்து 56 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை.!

செய்திகள்

lttesurrender.jpgவெலிகந்த சிறப்பு புனர்வாழ்வு முகாமில் இருந்து 56 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டதாக புனர்வாழ்வுக்கு பொறுப்பான அதிகாரி அறிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் மீளவும் சமூகத்துடன் இணைந்து வாழக்கூடிய வகையில் புனர்வாழ்வுப் பயிற்சிகளை வழங்கியுள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
56 முன்னாள் புலி உறுப்பினர்களின் பெற்றோர்கள் வெலிகந்தவுக்கு வரவழைக்கப் பட்டு அவர்களிடம் நேரடியாக இவர்கள் ஒப்படைக்கபட்டுள்ளனர்.

பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்துடனே சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு -ஜனாதிபதி தெரிவிப்பு..!

செய்திகள்

president230.jpgஎதிர்வரும் ஏப்ரலுக்கு முன்னர் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து அதில் தெரிவாகும் தமிழ் தலைமைகளுடன் கலந்துரையாடி இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வுள்ளதாகவும் எனினும் அத்தீர்வுக்கு அனைத்து பிரஜைகளினதும் பெரும்பான்மை அங்கீகாரம் அவசியமானது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சனைக்கான தீர்வை முன்வைக்கப் போவதாக ஜனாதிபதி அளித்த உறுதிமொழி தொடர்பாக கேட்ட போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அச்செவ்வியில் மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வுக்கு பெரும்பான்மையினர் இணக்கம் தெரிவிக்க வேண்டும் பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளாத தீர்வை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும் இந்நிலையில் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு உள்ளது. ஏற்கனவே இந்தியாவின் உதவியுடன் 13வது அரசியலமைப்பு இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கப்பட்டது எனினும் அதற்கு மேலதிகமாக அதிகாரத்தை தமிழ்தரப்பு கோருகிறது இதற்கு பெரும்பான்மையினரின் இணக்கம் தேவைப்படுகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் சிந்தனை - II உடனடியாக நடைமுறைப்படுத்த பணிப்புரை..!

செய்திகள்

3524995606_2cabf6c617.jpgமஹிந்தவின் சிந்தனை-’எதிர்கால நோக்கு’ இரண்டாம் பாகத்தை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
மஹிந்தவின் சிந்தனையில் முன்வைக் கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகளை முன்வைத்த வளவாளர்களை அலரிமாளிகை யில் சந்தித்துப் பேசிய ஜனாதிபதி இந்தப் பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
வளவாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, “எவ்வித தாமதமும் இல் லாமல் மஹிந்த சிந்தனையை நடை முறைப்படுத்துங்கள்” என்றார்.
இலங்கையை ஆசியாவிலேயே வர்த்தக, விமான, கடற்போக்குவரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்றுவதற்காகச் செயற்பட வேண்டும். இதன்மூலம் மக்களின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவும் நாடு முக்கிய பங்காற்ற முடியும்.

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான குழுவினர் மீள்குடியேற்றப்பட்ட மன்னார் மாவட்ட பிரதேசங்களுக்கு விஜயம்.. (புகைப்படங்கள் இணைப்பு)

செய்திகள்

நேற்றைய தினம் மன்னார் மாவட்ட முருங்கன் அடம்பன் உயிலங்குளம் மாந்தைகிழக்கு பாப்பாமோட்டை காத்தான்குளம் உட்பட பல பகுதிகளுக்கு புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் பிரதிநிதிகள் குழு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தது. மேற்படி பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்த புளொட் பிரதிநிதிகள் குழு அங்குள்ள மக்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன்இ அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது-அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன..!

செய்திகள்

2133lakshman_yapa_abeywardena_1j.jpg பாராளுமன்றத் தேர்தல்மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதென்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பில் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பினை அரசாங்கம் கோரியுள்ளது. அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையுள்ளது. அதற்கென ஓரிருவாரங்கள் அவகாசம் வழங்குவோமெனவும் குறிப்பிட்ட அமைச்சர் எதிர்க்கட்சியினரின் ஆதரவு கிடைக்காது போனாலும் பொதுத்தேர்தல் மூலம் மக்கள் ஆதரவினைப் பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டுமக்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளதையடுத்து அரசியலமைப்பில் திருத்தமொன்றை ஏற்படுத்தி சகல மக்களுக்கும் ஏற்றதான நல்லாட்சி யொன்றை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தைக் கலைப்பதுடனும் மார்ச்சில் தேர்தலை அறிவிக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது. பொதுத் தேர்தலில் மக்களின் பூரண ஆதரவு கிடைப்பது உறுதி என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் வரவழைக்க அரசாங்கம் முயற்சி -விமல் வீரவன்ச தெரிவிப்பு..!!

செய்திகள்

wimal-weeravansa-in.jpgபொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்லாமல் அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இதற்காக எதிர்கட்சியின் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொள்ள அரசாங்கம் முயற்சி செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சார்பாக இருந்துக் கொண்டு இப்படியான தகவல்களை வெளியிடுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

இராணுவத்தின் பிரதான அதிகாரியாக மேஜர் ஜெனரல் தயா ரத்தநாயக்க.

செய்திகள்

maj_gen_daya_rathnayake.jpgமேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இராணுத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் புலிகளுக்கான புனர்வாழ்வு வேலைத்திட்டங்களுக்கான இயக்குனர் நாயகமாக செயற்பட்டுவந்த அவருக்கு உடனடியாக அமுலுக்கு வரும்படியாக இவ்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் கிழக்கை விடுவிக்க மேற்கொண்ட போரின் கட்டளைத் தளபதியாக செயற்பட்ட அவர் ஈழம் போர் நான்கு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இராணுவப்பேச்சாளரவும் அவர் செயற்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து

செய்திகள்

eu.jpgஜனாதிபதி தேர்தல் வெற்றி தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானோர் வாக்களித்தமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ள இலங்கை மக்கள் காட்டி வரும் ஆர்வம் இந்தத் தேர்தலின் மூலம் வெளிப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குறப்பிட்டுள்ளது.
எனினும், தேர்தல் காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவர் கெதரீன் அஸ்டன் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாடு முழுவதிலும் ஜனநாயக ரீதியில் நடத்தப்பட்ட தேர்தலை வரவேற்பதாக சுட்டிகாட்டியுள்ளார்.
தேர்தல் வெற்றி தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத்தயார் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இலங்கையின் சகல மக்களுக்கும் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் பிரச்சாரக் காலத்தில் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள் தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வேட்பாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெற்றிபெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு விழுந்த ஒரு அடியாகும்-அமைச்சர் வி.முரளிதரன்..!

செய்திகள்

3797284866_2002558854.jpgஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெற்றிபெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த ஒரு அடி என்று தேசிய நல்லிணக்க அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தோல்வியடைந்த வேட்பாளரான சரத் பொன்சேகா மூலம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தலாம் என்று சர்வதேசசமூகம் எதிர்பார்த்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் பிரதேசங்களிலும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்குகள் குறைவாக விழுந்துள்ளதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழ்பகுதிகளில் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்குகள் குறைவாக விழுந்ததற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த துரோகமே காரணம் எனவும் அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்தேர்தல் மூலம் தமிழ்மக்களின் இதயங்களை வெல்வதற்கான வேலைத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்பதை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டியதேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனரல் சரத்பொன்சேகா இலங்கையை விட்டு வெளியேற முடியாது, அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டும் -பசில் ராஜபக்ச எம்.பி..!!

செய்திகள்

basil.jpgதேர்தலில் தோல்வி கண்டிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா, இலங்கையை விட்டு வெளியேற முடியாதெனவும் அவருக்கெதிராகவுள்ள அதிகளவிலான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். பொன்சேகா நாட்டிலேயே இருக்கவேண்டும் என்று தொலைபேசிமூலமான பேட்டியில் பசில் ராஜபக்ஷ ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். அவர் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது. அவருக்கெதிரான அதிகளவிலான குற்றச்சாட்டுகளை நாம் வைத்திருக்கின்றோம் என்று பசில் கூறியுள்ளார். அந்தக் குற்றச்சாட்டுகள் எவை என்பது பற்றி அவர் கூறவில்லை. யார் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்கள் என்பது பற்றியும் அவர் கூறவில்லை. தனது வாழ்க்கை தொடர்பாக பொன்சேகா அச்சமடைந்திருப்பதாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு பசில் ராஜபக்ஷவிடம் கேட்கப்பட்டபோது, இல்லை நான் அவ்வாறு நினைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இலங்கையின் வட, கிழக்கில் தமிழ்ப்பகுதிகளில் பொன்சேகா அதிகளவு வாக்குகளை ஏன் பெற்றார் என்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். தமிழர்களின் இதயப் பகுதியாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் பொன்சேகா 63 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார். அங்கு ஜனாதிபதி 24சதவீதமான வாக்குகளையே பெற்றிருக்கிறார். அத்துடன், வட,கிழக்கு மாகாணங்களில் சகல பகுதிகளிலும் பொன்சேகா அதிகளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார். கடந்த 4 வருடங்களாக நாங்கள் கிராமப்பகுதிகளை அபிவிருத்தி செய்துள்ளோம். எங்களுக்கு அவர்கள் வாக்களித்ததற்கு இதுவும் ஒரு காரணம். அத்துடன், ஜனாதிபதிக்கு வாக்களிப்பதன்மூலம் தாங்கள் ஜனநாயகத்தை விரும்புவதை நிரூபித்துள்ளனர். அவர்கள் அராஜகத்தை விரும்பவில்லை. அவர்கள் சர்வாதிகாரத்தை விரும்பவில்லை. அதனால், அவர்கள் பொன்சேகாவை நிராகரித்துவிட்டனர் என்று பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

மஹிந்த சிந்தனையை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன-சுரேஷ் பிறேமச்சந்திரன் எம்.பி

செய்திகள்

suresh_premachanthiran.jpgமஹிந்த சிந்தனையை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவை ஏற்று, அதற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்துத் தமிழ்மக்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவை மக்கள் மத்தியில் எடுத்துச்சென்ற கூட்டமைப்பு நண்பர்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கடுமையாக உழைத்த இளைஞர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நன்றியை அறிவித்துக் கொள்கின்றது. யுத்தத்தில் வென்றதற்குப் பரிசாக சிங்கள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்திருக்கலாம். அல்லது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போலத் தேர்தல் முடிவுகள் மோசடி செய்யப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் நான்கு வருட ஆட்சியில் தலைவிரித்தாடிய தமிழின விரோத நடவடிக்கைகளையும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தமது வாக்குகளின் மூலம் தெட்டத் தெளிவாகத் தெரியப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி தமிழ்மக்களையும் இந்நாட்டுக் குடிமக்களாகக் கருதி அவர்களையும் அணைத்துச் செல்ல விரும்பினால் அவரது சிந்தனையில் மாற்றம் வேண்டும் என்பதைத் தமது வாக்குகளால் உணர்த்தியுள்ளார்கள். அது மாத்திரமல்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ்மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்பதையும் வடகிழக்கு என்பது தமிழ்மக்களின் பிரிக்கப்பட முடியாத தாயகம் என்பதையும் தமிழ்மக்கள் மிகத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை முடிவிற்கு மாறாக, ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்ட வேட்பாளரையும் தமிழ்மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர். இதன்மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயலும் சுயநல சக்திகளுக்குத் தமிழ்மக்கள் சரியானபாடம் புகட்டியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

14லட்சம் வாக்குகளால் தான் முன்னிலையில் இருந்த போதும் அவை மஹிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளது -சரத்பொன்சேகா குற்றச்சாட்டு..!

செய்திகள்

sarath.jpgஇராணுவப்புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டதாக அரசாங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் இராணவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனர் சரத்பொன்சேகா மறுத்துள்ளார். தாம் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் இருந்து இந்த திட்டத்தை தாம் வகுத்ததாக அரசாங்கம் நினைக்கிறது எனினும் தாம் அவ்வாறான திட்டம் ஒன்றை மேற்கொண்டிருக்கவில்லை என சரத் பொன்சேகா நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். அன்னம் சின்னத்தின் கீழ் தாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்த அவர் தாம் மக்களுக்கு வழங்கிய நம்பிக்கையான மாற்றம் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற்றப் போதும் அந்த முடிவுகள் சதிசெய்து இல்லாமல் செய்யப்பட்டதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தற்போது நான்கு பொலிஸார்களை மாத்திரமே தமது பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தமக்கு 70பேர் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர் நாட்டின் ஜனாதிபதி சட்டத்தை மதிக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு அடுத்தநாள் தம்மை சித்திரவதை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவித்த அவர் பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் தமது வீட்டையும் எதிர்கட்சி தலைவரின் வீட்டையும் சோதனையிடுவதற்கும் தமது கடவுச்சீட்டை தடை செய்வதற்கும் தம்மையும் தமது மருமகனையும் இரகசிய பொலிஸாரின் முன்னிலையில் ஆஜர்செய்வதற்கும் திட்டமிடப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர் இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பவும் நீதிமன்ற நடவடிக்கையை எடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையான தகவலின் அடிப்படையில் முதல்கட்ட வாக்கு எண்ணும் பணிகளின் போது தாம் மஹிந்த ராஜபக்சவை காட்டிலும் 14லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்ததாக குறிப்பிட்ட சரத்பொன்சேகா இந்த வாக்கு எண்ணிக்கையை அப்படியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து ஊடகமாநாட்டில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத்தலைவர் மங்கள சமரவீர தெரிவிக்கையில் புத்தளம் அநுராதபுரம் மாத்தளை ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட செயலகங்களில் வாக்கு எண்ணுபவர்கள் பலர் துரத்தப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வாக்குப்பெட்டிகளை தம்மால் பாதுகாக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளரின் தலைக்கு குறிவைத்து துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தப்பட்டதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் முதல்தடவையாக தேர்தல் முடிவுகளை வெளியிடும் முறை ஒன்று தேர்தல்கள் திணைக்களத்தில் அமைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய மங்கள சமரவீர முதல்தடவையாக தேர்தல்கள் ஆணையாளரின் கையொப்பமில்லாமல் தேர்தல் முடிவுகள் மின் அஞ்சலில் அனுப்பப்பட்டு வாசிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு மக்கள் சுயாமாக வாக்களிக்கும் ஜனநாயகம் மீளக்கிடைத்தமை மகிழ்ச்சியை தருகிறது -ஜனாதிபதி தெரிவிப்பு..!!

செய்திகள்

mahinda2.jpgவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் சுயமாக வாக்களிக்கும் வகையில் ஜனநாயகம் மீள கிடைக்கப் பெற்றமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று மாலை ஊடகத்துறை பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தமது நாற்பது வருட அரசியல் பயணத்தில் கீழ்தரமான இகழ்வான தேர்தல் ஒன்றிற்கு கடந்த நாட்களில் முகம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இனவாதம் மீண்டும் எழுப்பப்பட்ட போதும் பயங்கரவாதம் மறுவடிவம் பெறுவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ஊடகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சமுதாயத்தை கட்டியெழுப்பும் பணிகளுக்கு ஊடகங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். இதற்கிடையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் சுயமாக வாக்களிக்கும் வகையில் ஜனநாயகம் மீள கிடைக்கப் பெற்றமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

தொலைபேசியில் அச்சுறுத்தவில்லை பத்திரிகை தொடர்பிலேயே விளக்கம் கோரினேன் -கோத்தபாய தெரிவிப்பு..!!

செய்திகள்

primary-medium.jpgஜே.வி.பி.கட்சியினால் பிரசுரிக்கப்படும் லங்கா இரிதா பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி ஒன்று தொடர்பில் விளக்கம்கோரும் நோக்கில் தாம் கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன் தொடர்பினை ஏற்படுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமக்கு அபகீர்த்தி ஏற்படும் நோக்கில் குறித்த பத்திரிகையின் செய்தி வெளியிடப்பட்டு உள்ளதாகவும் அது தொடர்பில் விளக்கம் கோரவே தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சோமவன்ச அமரசிங்கவிற்கு மட்டுமன்றி கே.டி.லால் காந்தவுடனும் தாம் தொடர்பு கொண்டு உரையாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி அழைப்பை ஓர் அச்சுறுத்தலாக சோமவன்ச கருதுவாராயின் அதுஅவரது விருப்பம் என சுட்டிக் காட்டியுள்ளார். தாம் ஓர் அரசாங்க அதிகாரி எனவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரச சொத்துக்களை களவாடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது விளக்கத்தை அவர் பிழையாக விளங்கிக் கொண்டால் எதிர்காலத்தில் சட்டநடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்படலாம்

செய்திகள்

parliamnet.jpgதற்போதுள்ள இலங்கை பாராளுமன்றம் தனது ஆறு வருட ஆயுள்காலத்தை வரும் ஏப்பிரல் மாதம் 2ம் திகதியுடன் நிறைவு செய்வதால் புதிய பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஒன்று விரைவில் வரவுள்ளது.
வரும் மார்ச் மாதம் மூன்றாம் அல்லது நான்காம் வாரங்களில் புதிய பராளுமன்ற தேர்தல் வரலாமென கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள பாராளுமன்றத்தை கலைத்து புதிய பாராளுமன்றத்துக்கான மக்கள் ஆணையை கோருமாறு ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் வெளியிடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

சரத் பொன்சேகாவும், தேர்தல் ஆணையாளரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை-அரசாங்கம்..!

செய்திகள்

sri-257.jpgஎதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவையும், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவையும் வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அரசாங்கம் அவற்றை முழுமையாக மறுப்பதாகவும் மனிதஉரிமைகள் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்துள்ளார். தனது தோல்வியை தாங்கிக்கொள்ள இயலாத பொன்சேகா சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்ப்பிரசாரங்களைச் செய்து அனுதாபம்தேட முயல்கின்றார். இதுபோன்ற இழிவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன்மூலம் நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் சமரசிங்க பொன்சேக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொன்சேகா வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை. அவர் நினைத்தநேரம் அந்த ஹோட்டலைவிட்டு வெளியே செல்லலாம். ஒரு ஜனாதிபதி வேட்பாளரென்ற வகையில் பாதுகாப்பு வழங்குவதற்காக அவ்வீதியில் பாதுகாப்பு படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர் அதனை தவறாககருத்தில் கொண்டுள்ளதுடன் ஊடகங்களில் போலிபிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார். மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுமாலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியிருப்பதனை புரிந்து கொண்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த சதிகார கும்பல், மேற்கூறியது போன்ற கட்டுக்கதைகளை குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், இணையத் தளங்களினூடாக பரப்பி வருகின்றது. அதுமட்டுமன்றி எதிரணி வேட்பாளரும் கட்சித் தலைவர்களும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பொன்சேகாவை யாரும் வீட்டுக்காவலில் வைக்கவில்லை. அவர் இருப்பது வீடு அல்ல அது பல உள்நாட்டு வெளிநாட்டவர்கள் வந்துபோகும் பிரபலமான ஹோட்டலாகும். எமக்கு கிடைத்த தகவலடிப்படையில் 26ம்திகதி மாலை 4.30மணியளவில் பொன்சேகாவும் அவருடனிருந்த கட்சித் தலைவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் குறித்த ஹோட்டலிருந்த இரண்டு மாடிகளிலிருந்த 70அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்துள்ளனர். இவரை அரசாங்கம் அங்கே அழைத்து செல்லவில்லை. தானாக விரும்பியே அவர் அங்கு சென்றுள்ளார். குறித்த ஹோட்டல் அமைந்திருக்கும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலையம் என்பது சகலரும் அறிந்ததே. ஹோட்டலுக்கு முன்பாகவே விமானபடைத்தளம் அமைந்திருப்பதனால் எப்போதுமே அப்பகுதியில் படையினர் குவிக்கப்பட்டிருப்பது வழமை. அதேவேளை, இராணுவத்திலிருந்து தப்பிவந்த ஒன்பதுபேர் ஆயுதங்களுடன் ஹோட்டலுக்குள் இருந்துள்ளனர். இவர்கள் குறித்த விபரங்கள் கிடைத்ததும் மேற்படி ஒன்பதுபேரும் ஹோட்டலுக்கு வெளியே வரவழைக்கப்பட்டே கைது செய்யப்பட்டனர். இதன்காரணமாகவும் வழமைக்கு மாறாக படையினர் இப்பகுதியில் சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இவற்றை காரணமாக காட்டி சர்வதேச நாடுகளிடம் அனுதாபம் தேட முயற்சிக்கிறார் பொன்சேகா எனவும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

நான் அடைந்த வெற்றியானது நாட்டு மக்களின் வெற்றியே-ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச..!

செய்திகள்

mahinda_rajapaksa.jpg6வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரியும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் என்றரீதியில் தாம் அடைந்த வெற்றி, மக்களின் வெற்றியாகக் கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். மக்களினால் தமக்கு வழங்கப்பட்ட இந்த ஆணையை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். மாபெரும் வெற்றியாக இதனை கருதவேண்டும் எனவும், மக்களின் தெரிவு இந்த வாக்கெடுப்பில் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக முறைமை தொடர்பில் மக்கள் நன்கு அறிந்துள்ளதாகவும், அதன் வெளிப்பாடே இத்தேர்தல் வெற்றியென்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் அணிதிரண்டு ஒன்றிணைய வேண்டியகாலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு வாக்களித்தோருக்கும், வாக்காளிக்காதோருக்கும் தாமே ஜனாதிபதியெனவும், அனைத்து மக்களும் சட்டத்தின்முன் சமமானவர்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் தங்கியுள்ள விடுதியைச் சுற்றி பெருமளவு படையினர் குவிப்பு-சரத் பொன்சேகா..!

செய்திகள்

gen_sarath_fonseka.jpgமுன்னதாக கொழும்பு நகரில் ஃபொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால், இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, ஃபொன்சேகாவைக் கைதுசெய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
இராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் ஃபொன்சேகா அந்த விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதய நாணயகார தெரிவித்தார்.
இருந்தபோதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஃபொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டிருந்தனர்.
விடுதிக்கு வெளியே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்ததால், அங்கு பதற்றம் நிலவியது.
விடுதிக்கு வெளியிலிருக்கும் இராணுவத்தினர் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் இப்படியான பதற்றம் மற்றும் இழுபறிக்குப் பின்னர் சரத் ஃபொன்சேகா விடுதியிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஆறாவது ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச தெரிவு..!

செய்திகள்

mahina11.jpgஇலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் முடிவடைந்து அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் 57.88சத வீத வெற்றியினை ஈட்டியுள்ளார். இதன் பிரகாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் 60லட்சத்து 15ஆயிரத்து 934வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா 41லட்சத்து 73ஆயிரத்து 185வாக்குகளையும் மொத்தமாகப் பெற்றுள்ளனர். அவர் வாக்குப்பெற்ற வீதமானது 40.15வீதமாகும். இதன்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அமோக வெற்றியீட்டியுள்ளார். அவர் தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக 02வது தடவையும் தெரிவானதை தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க இன்றுமாலை செய்தியாளர்களிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவாவதற்கு தேவைப்பட்ட 50வீத வாக்குகளுக்கும் மேற்பட்ட வீதத்தை மகிந்த ராஜபக்ச பெற்று வெற்றியீட்டினார். இதனடிப்படையில் 18,42,749 மேலதிக வாக்குகளைப் பெற்று மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார். நாட்டின் வன்னி மாவட்டம் உள்ளிட்ட 22மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேர்தலில் 16 மாவட்டங்களில் மகிந்த ராஜபக்சவும், 06மாவட்டங்களில் சரத் பொன்சேகாவும் முன்னிலை பெற்றிருந்தனர்.