3 February 2010
செய்திகள்
வன்னியில் இறுதிக்கட்ட போர் நடைபெற்றவேளை படையினரிடம் சரணடைந்த தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரின் பிணை தொடர்பான புதிய உத்தரவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பொலிஸ் தலைமையகத்தில் கையொப்பம் இடவேண்டும் என முன்னர் விதிக்கப்பட்ட உத்தரவை மாற்றி, அவர்கள் தங்கியிருக்கும் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் கைச்சாத்திட அனுமதிக்க வேண்டும் என்று இருவர் சார்பிலும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் அவர்கள் தங்கியுள்ள யாழ்ப்பாணம், அல்லது வவுனியா பொலிஸ் நிலையத் தில் கையொப்பம் வைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
3 February 2010
செய்திகள்
வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்திற்கென இந்திய அரசாங்கம் 2,644,200 டொலர் பெறுமதியான கல்வனைஸ் கூரைத் தகடுகளை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதுடன் அதன் முதற் தொகுதி இன்று கையளிக்கப்படவுள்ளது.
இன்று காலை இவ்வைபவம் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ளதுடன் இந்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த் ஜனாதிபதியின் ஆலோசகரும் வடக்கின் வசந்தம் அபிவிருத்திச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷவிடம் தகடுகளைக் கையளிக்கவுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.
இன்றைய இவ்வைபவத்தின் போது 500 மெற்றிக்தொன் கல்வனைஸ் தகடுகளைக் கொண்ட 19 கொள்கலன்களை இந்திய உயர்ஸ்தானிகரிடமிருந்து பசில் ராஜபக்ஷ எம்.பி. பெற்றுக்கொள்ளவுள்ளார். இதன் பெறுமதி 50,8347.45 அமெரிக்க டொலராகுமென மேற்படி அமைச்சு தெரிவித்தது.
3 February 2010
செய்திகள்
பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்துப் போட்டியிடுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன், அதேசமயம் தமிழ்முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு பங்கம் ஏற்படாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{டன் புரிந்துணர்வுடன் செயற்படுவோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளையும் உரிமைகளையும் பாதுகாத்து எமது மக்கள் பெரும்பான்மை சமூகத்தோடு சம உரிமையுடன் வாழும் சூழ்நிலையை உறுதிப்படுத்துவதற்காகவே முஸ்லிம் காங்கிரஸ{டன் புரிந்துணர்வு அடிப்படையில் ஒன்றுபட்டிருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார். 