இலங்கையின் 62வது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் கண்டி மாநகரில் வெகுசிறப்பாக இடம்பெற்றது (புகைப்படங்கள் இணைப்பு)!

செய்திகள்

பயங்கரவாதம் முற்றாக முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் இலங்கை தனது 62ஆவது சுதந்திரதினத்தை இன்று வெகு சிறப்பாக கொண்டாடியது. சுதந்திரதினத்தின் பிரதான நிகழ்வுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டி தலதாமாளிகை வளாகத்தில் இன்று நடைபெற்றன. பயங்கரவாதம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இடம்பெறும் முதலாவது சுதந்திரதின நிகழ்வு இதுவென்பது முக்கியமானது. காலை 8.50 மணிக்கு ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றினார். இதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்காக இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் மரியாதையின் நிமித்தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.

மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் தேசிய கொள்கைத் திட்டம்..!

செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் தேசிய கொள்கைத் திட்டமொன்று வகுக்கப்பட உள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கைத் திட்ட வரைவு அண்மையில் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவுத் திட்டம் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்பினக்கு விநியோகம் செய்யப்பட்டு கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
கருத்துக்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் இறுதித் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொள்கைத் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதனை மனித உரிமைகள் அமைச்சு நேரடியாக கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது.
மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தல் தொடர்பான தரவுகளை பொதுமக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் பெற்றுக் கொள்ள ஆவண செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் மனித உரிமை நிலைமை, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, வியன்ன பிரகடன அமுலாக்கம் போன்றவற்றை கருத்திற் கொண்டு தேசிய கொள்கைத் திட்டமொன்றை வகுக்கத் தீர்மானித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொள்கைத் திட்டம் நீண்ட கால ஆய்வின் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமத்துவ உரிமைகளை சகலரும் அனுபவிக்கும் இலங்கையை கட்டியெழுப்புவோம்..!

செய்திகள்

mahinda.png”வேறுபாடுகளை மறந்து சுதந்திரத்தினதும், அபிவிருத்தியினதும் முழுமையான நன்மைகளைப் பெறவும் சமத்துவமான உரிமைகளை எல்லோரும் சமமாக அனுபவிக்கவும் கூடிய ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்காக நம்மை அர்ப்பணித்துச் செயற்படுவோம்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இன்று கொண்டாடப்படும் இலங் கையின் 62வது சுதந்திர தின கொண்டாட்டம் கடந்த வருடம் எமது நாட்டை விட்டும் பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட் டதன் பின்னர் இடம்பெறும் முதலாவது கொண்டாட்டம் என்றவகையிலும், எமது மக்கள் ஜனநாயகத்திற்கான தங்க ளது அர்ப்பணத்தை மிக உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தியி ருக்கும் ஒரு சூழ்நிலையில் நடைபெறும் ஒரு கொண்டாட்டம் என்ற வகையிலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

இலங்கையின் 62வது சுதந்திரதினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு..!

செய்திகள்

sri-lanka-flag_1-150×101.gifஇலங்கையின் 62வது சுதந்திரதினம் இன்றாகும். இதனை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுதந்திரதின பிரதான வைபவம் இம்முறை கண்டி, தலதா மாளிகை வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 8.30 மணிக்கு பிரதான வைபவம் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு கண்டி நகரம் உட்பட அதனை அண்மித்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் 10ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸாரும் முப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார, பிரதம நீதியரசர் அசோக்க டி.சில்வா, பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத்அமுனுகம, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர, மத்தியமாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். பாதுகாப்புப் படை சார்பில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப்மார்ஷல் ரொஷான் குணதிலக்க, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். சம்பிரதாய முறைப்படி இம்முறையும் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரின் மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெறவுள்ளன. இன்றைய சுதந்திரதின பிரதான வைபவத்தின் மரியாதை அணிவகுப்பில் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 2514பேர் பங்கு கொள்ளவுள்ளனர். இராணுவத்தைச் சேர்ந்த 1450 வீரர்களும், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 250வீரர்களும், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 314வீரர்களும், பொலிஸார் 250வீரர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 250வீரர்களும் பங்குகொள்ளவுள்ளனர். இதேவேளை, வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் 21கலாசார மத்திய நிலையங்களைச் சேர்ந்த 1000 நடன மற்றும் நாட்டிய கலைஞர்களும், ஆயிரம் மாணவ, மாணவியரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

சுதந்திரக்கட்சி வேட்பாளர்களை தெரிவு செய்ய நியமன சபைகள் அமைப்பு..!

செய்திகள்

sri_lanka_1.gifஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்கீழ் 2010 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை மாகாண மட்டத்தில் தெரிவுசெய்வதற்கான நியமன சபைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தலைமையகத்தால் விநியோகிக்கப்படும் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திசெய்து மார்ச் 5ற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டுமென்று சுதந்திரக்கட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். வடமேல் மாகாணம், வட மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம், வடக்கு மாகாணம் ஆகியவற்றுக்கான நியமன சபைக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை தாங்கவுள்ளார். மேல்மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாண நியமன சபைக்கு அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ண தலைமை தாங்கவுள்ளார். தென்மாகாணம், சப்ரகமுவ மாகாண நியமனசபைக்கு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமை தாங்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமாக மேன்முறையீட்டு சபை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ளது. கவலைகளைத் தெரிவிப்பதற்காக இச்சபை அமைக்கப்படவுள்ளது.