7 February 2010
செய்திகள்
ரஷ்யாவுக்கு மூன்றுநாள் விஜயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளார். இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டு இருக்கும் ஜனாதிபதி, ரஷ்ய அதிபரை சந்தித்து ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்குவதற்கும், சீர்செய்வதற்கான கடன் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிடவுள்ளார். ரஷ்யாவை உண்மையான உற்ற நண்பனாக இலங்கை பார்க்கிறது. ஐ.நா பாதுகாப்பு சபையின் மற்றுமொரு நிரந்தர உறுப்பினரான சீனாவுடன் இணைந்து இலங்கை அரசின்மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்பான விவாதம் வருவதை ரஷ்யா தடுத்து இருந்தது. பலமாத காலமாகவே, ரஷ்யாவுக்கு நன்றிகூறி இலங்கையில் இருக்கின்ற ரஷ்ய தூதரகத்துக்கு முன்பாக பதாதை ஒன்று தொங்கி வருகிறது. இலங்கை ஜனாதிபதியின் விஜயத்தின்போது, சுமார் 300மில்லியன் டொலர் மதிப்பிலான கடன் இலங்கைக்கு கொடுப்பது தொடர்பான ஒப்பந்தம் கையொப்பமாகும் என்றும், இந்த கடன் ரஷ்ய ஆயுதங்களை வாங்குவதற்கும், சிவில் மற்றும் இராணுவ உபயோகம் கொண்ட பொருட்களை வாங்குவதற்காகவும் கொடுக்கப்படுகிறது என ரஷ்யாவின் அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த கடன் ஏற்கனவே இலங்கையிடம் இருக்கும் ரஷ்ய ஆயுதங்களை சீர்செய்யவும் பயன்படும் என்று விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆயுதம் மட்டுமன்றி தேயிலை வியாபாரத்திலும் இருநாடுகளுக்கும் இடையில் உறவு நிலவிவருகிறது. இலங்கை தேயிலையை அதிகமாக வாங்கும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா இருக்கிறது.
7 February 2010
செய்திகள்
யாழ் கொழும்புத்துறையில் கடந்த 3ம் திகதி இடம்பெற்ற கொடுரமான கொலைச் சம்பவம் தொடர்பாக கொலையுண்ட எஸ்.சிவராசாவின் மனைவி உட்பட இருவரை யாழ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இக்கொலையினால் கொழும்புத்துறையே கதிகலங்கியதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை யாழ் குடத்தனைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை பட்டம்விட்டு விளையாடியபோது 10வயதான வரதராசா வசந்தராஜ் எனும் சிறுவன் கிணற்றில் தவறிவீழ்ந்து மரணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
7 February 2010
செய்திகள்
அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிச்சென்ற நிலையில் 45 இலங்கைத் தமிழ் அகதிகள் இன்றுபகல் காப்பாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகாமையில் படகொன்றில் சென்ற நிலையில் படகில் எரிபொருள் தீர்ந்ததுடன், உணவு மற்றும் நீர் அன்றி அவலக்குரல் எழுப்பிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பாக கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த இலங்கையர்கள் கடந்தமாதம் 20ம் திகதி இலங்கையிலிருந்து படகில் புறப்பட்டுள்ளதுடன், நான்கு நாட்களுக்கும் மேல் உணவு மற்றும் நீரின்றி அவதியுற்றுள்ளதாகவும், அவர்களுக்கு அம்மைநோய் மற்றும் வயிற்றோட்டம் என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
7 February 2010
செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் மன்னார் மாவட்ட அதிகாரிகளுக்குமிடையில் இன்றுமுற்பகல் மன்னார் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது மன்னார் மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.