8 February 2010
செய்திகள்
முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் முப்படைகளின் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத்பொன்சேகாவும் அவருடைய ஊடகச் செயலாளரான சேனக்க டி சில்வாவும் இன்றிரவு சுமார் 8மணியளவில் இராணுவப் பொலீசாரினால் விசாரணைக்கென கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகா கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலதிக தகவல்கள் தொடரும்
8 February 2010
செய்திகள்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் தனித்தே போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை தவறான பாதையில் வழிநடாத்தியுள்ளதாகவும் , ஈபிடிபியினர் தனித்து போட்டியிட்டால் அவர்கள் யாழ் குடாநாட்டில் மேற்கொண்டுள்ள ஆடாவடித்தனங்கள் மற்றும் கொலைகளில் விரக்தியடைந்துள்ள மக்கள் அவர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளதுடன், அரசாங்கம் தேர்தலில் போட்டியிடாது விட்டால் தமது கட்சி 5 மேலான ஆசனங்களைக் கைப்பற்றும் எனவும் த நேசன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தலில் 15 விடயங்கள் அடங்கிய தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை மக்கள் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வாக இந்திய வடிவிலான பெடரல் ஆட்சி முறை விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
8 February 2010
செய்திகள்
இலங்கையின் 62ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெனீவாவில் அமைந்துள்ள சுவிஸ்லாந்துக்கான இலங்கை தூதுவராலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (05.02.2010) சுதந்திரதின கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. சுதந்திரதின நிகழ்வுகளின் போது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பெருமளவில் பங்கேற்றிருந்தனர். மூவினங்களையும் சேர்ந்த குழந்தைகள் குத்துவிளக்கேற்றி வைத்ததுடன், சர்வமதத் தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் சுதந்திரதின நிகழ்வுகள் ஆரம்பமாகின. சுவிஸ்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் திருமதி.கேணுகா செனவிரத்ன இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை சுவிஸ்லாந்துக்கான இலங்கைத் தூதுவராலய முதலாவது செயலாளர் திரு.ஜவ்பர் தொகுத்து வழங்கினார். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம ஆகியோரின் சுதந்திர தினச் செய்திகளும் அங்கு வாசிக்கப்பட்டது. அவர்களின் சுதந்திரதினத் செய்திகள் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கூறப்பட்டது. 
8 February 2010
செய்திகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் Germanகிளைக் கூட்டம் 6.2.2010அன்று Stuttgartஇல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசியல் கட்சியினுடைய அவசியம் புரிந்து கொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்தில் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணிக் கட்சியை (PLOTE -D.P.L.F) தேர்தலில் வெற்றியடைய முழுமுயற்சியுடன் செயற்படுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் கழக அனுசரணையுடன் ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F) யின் செயற்பாட்டுக்கு Germanyயின் அனைத்து பிராந்தியங்களுக்கும் பிராந்திய அமைப்பாளர்களை நியமிப்பதுடன் கழக கடந்தகால ஆதரவாளர்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. எனவே கடந்தகால ஆதரவாளர்களையும் அங்கத்தவர்களையும எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு பின்வரும் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம். நன்றி! -தொடர்புகட்கு: 07154181312 (00497154181312), E-Mail: dplfgermany@ymail.com
8 February 2010
செய்திகள்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் புலிகள் கட்சி, தனித்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பிலுள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தின்போது, அதில் பங்கேற்ற பெரும்பாலானோர், கட்சி பொதுத்தேர்தலில் தனித்தே போட்டியிடவேண்டும் என தமது விருப்பத்தை வெளியிட்டனர். இந்தநிலையில் இந்த விருப்பத்தை உடனடி தீர்மானமாக எடுக்காது, எதிர்வரும் வாரத்திற்குள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து நிலைமையை விளக்கிய பின்னர் முடிவை எடுப்பதென கட்சி இன்று தீர்மானித்ததாக கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். கிழக்கிலுள்ள தமிழ்மக்கள் வெற்றிலைக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்ற அடிப்படையிலேயே தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் தமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு விளக்கவுள்ளனர். ஜனாதிபதி இதற்கு சம்மதிக்காவிட்டால் வெற்றிலையிலேயே போட்டியிட வேண்டியேற்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
8 February 2010
செய்திகள்
கண்டி பள்ளேகலயில் நடக்கும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்க்க வந்த மடவளயைச் சேர்ந்த மாணவன் நீரில்மூழ்கி மரணமடைந்துள்ளான். மடவளையைச் சேர்ந்த முகமட் அஸ்வர் என்ற 13வயது மாணவன் கண்காட்சியை பார்த்தபின் பலகொல்ல ஆற்றில் நீராடசென்ற வேளையில் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளான் என பலகொல்ல பொலிசார் தெரிவித்துள்ளனர்.
8 February 2010
செய்திகள்
சண்டேலீடர் செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளகூறி அழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். அதிகாரிகள் இந்தக்கொலை தொடர்பில் கெப்பிட்டிவெலனவிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் இந்தக் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு அவரை வலியுறுத்தி வருவதாக சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். தமது ஆதரவாளரான இந்த அதிகாரியை ஒப்புக்கொள்ளச் செய்வதன் மூலம் தமக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக சரத்பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள கெப்பிட்டிவெலன தற்போது பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் மைத்துனர் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டு;ள்ளார். எனினும் இதனை மறுத்துள்ள மஹிந்த பாலசூரிய கைது செய்யப்பட்டுள்ள கெப்பிட்டிவெலன தமது தூரத்து சொந்தக்காரரே எனத் தெரிவித்துள்ளார்.
8 February 2010
செய்திகள்
கட்சி சின்னம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட அதிக நாட்டம் காட்டுவதாகவும், ஜே.வி.பி யானைச் சின்னத்தின்கீழ் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அன்னபட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடாக காணப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட்டால், ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஏனைய கட்சிகளின்; ஆதரவுடன் ஜே.வி.பி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுமாறு ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் அவர் எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்னப்பட்சி சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை தேர்தலில் களமிறக்கும் முயற்சிகளை பொன்சேகா மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யானைச் சின்னம் தொடர்பில் ஜே.வி.பியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின்N பாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஜே.வி.பி மேற்கொண்ட உடன்படிக்கையின் மூலம் ஜே.வி.பி 39 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதுடன், சில சிரேஸ்ட சுதந்திரக் கட்சித் தலைவர்கள் தேர்தலில் தோல்வியைத் தழுவினர். இதனைக் கருத்திற் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் ஜே.வி.பியுடன் கூட்டணி சேர்வதில் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
8 February 2010
செய்திகள்
தெற்கிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் படையெடுத்துவரும் பெரும்பான்மையின வீதியோர வியாபாரிகளால் யாழ் நகரம் திண்டாடி வருகின்றது. அவர்கள் எழுந்தமானமாக வீதியோரங்களில் கடைகளை அமைத்து வருகின்றனர். நல்லூர் உள்ளிட்ட பிரதான இந்து ஆலயங்களும் இதற்குத் தப்பவில்லை. இந்த அத்துமீறல்கள் தொடர்பில் வணிகக் கழகங்கள் ஆலய நிர்வாகங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பலவும் மாநகரசபை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளன. எனினும் தென்னிலங்கைத் தலைமைக்குப் பயந்து மாநகரசபை முதல்வர் மற்றும் மாநகரசபை பணியாளர்கள் தமது கடமைகளை ஆற்றத் தடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.