ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்..!

செய்திகள்

கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்படி அவருக்கு இராணுவ நீதிமன்றத்தினால், ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவர்மீது இராணுவத்தளபதி மற்றும் கூட்டுப்படை தலைமையதிகாரியாக இருந்துகொண்டே எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசைக் கவிழ்க்க முயற்சித்தமை, இராணுவத்தின் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தமை மற்றும் இராணுவத்தில் தப்பி வந்தவர்களை தம்முடன் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதனடிப்படையிலேயே இராணுவ நீதிமன்றத்தின் முன்னிலையில் அவரை நிறுத்தமுடியும் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டுள்ளது..!

செய்திகள்

பாராளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. பாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அச்சிடும் நோக்கில், குறித்த அறிப்பு அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 8ம்திகதி அளவில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப்பணிப்பாளர் லூசியான் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 19ம் திகதிமுதல் 26ம் திகதிவரையில் கோரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன வேட்பாளர்களை தெரிவதில் கூடுதல் முனைப்புக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபடத் தீர்மானம்..!

செய்திகள்

எதிர்கட்சிகள் நாளை ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. நாடுதழுவிய ரீதியில் எதிர்க்கட்சி ஆதரவு அமைப்புக்கள் போராட்டங்களையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளன. ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கும் விளக்கம் அளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனோமா பொன்சேகா ஐசிஆர்சி யை நாடியுள்ளார்.

செய்திகள்

கைது செய்யப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவின் பாரியார் தனது கணவனை கண்டுபிடிப்பதற்கும் அவருக்கு தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவதற்கும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடியுள்ளார்.
இவ்விடயத்தினை ஐசிஆர்சியின் பேச்சாளர் சரசி விஜெரத்ன உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்வதற்கு தாம் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
மறுமுறத்தில் ஜெனரல் பொன்சேகாவின் மனைவி இன்று பிற்பகல் அவரை பார்வையிட்டதாகவும், அதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாட் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்புக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கப்படுமென இஸ்ரேல் அறிவிப்பு..!

செய்திகள்

இலங்கையின் பாதுகாப்புக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கப்படுமென இஸ்ரேல்அறிவித்துள்ளது. இத்தகவலை இஸ்ரேல் ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். இஸ்ரேலுக்கான புதிய இலங்கைத் தூதுவர் டொனால்ட் பெரேராவுக்கும் இஸ்ரேலிய ஜனாதிபதி சிமோன் பெரசுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே இஸ்ரேல் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்புக்கு முன்னர் வழங்கிய ஒத்துழைப்புக்களைப் போலவே தொடர்ந்தும் வழங்கவுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பலத்த பாதுகாப்பில் சரத் பொன்சேகா; குடும்பத்தினர் அவரை சந்திக்கலாம்..!!

செய்திகள்

இராணுவப் பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் சென்று சந்திக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
அத்துடன் அவருக்குத் தேவையான வைத்திய வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஒருவர் தொடர்ந்து ஆறு மாத காலத்துக்கு இராணுவச் சட்டங்களை மதித்து நடக்கவேண்டியது அவசியமாகும் என்றும் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - புளொட் தலைவர் த.சித்தார்த்தன்..!!

செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினைத் தேடித்தரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரலாற்று ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளார். அத்துடன் கடந்த தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பெருந்தொகையான மக்கள் வெற்றிபெற ஆதரித்துள்ளமை அவருடைய தலைமைத்துவத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளமையை எடுத்துக் காட்டுகின்றது. எனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசி சிறுபான்மை மக்களின் பிரச்சினையைத் தீர்;த்துக் கொள்ள வேண்டுமென்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த புலிகளின் யுகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறுகளை மீண்டும் விடக்கூடாதென்றும், கடந்த காலங்களில் புலிகளால் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்புகள் முடக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டிள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே புளொட் தலைவர் த.சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்..!

செய்திகள்

எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாகத் கூறப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க நேற்று இந்தியாவிற்கு பயணமானதாகவும், நாளை அவர் நாடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், என்ன காரணத்திற்காக ரணில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. நாட்டின் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள விஜயம் தொடர்பில் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.