சுவாமி நித்தியானந்தா இலங்கைக் காடுகளில் மறைந்திருப்பதாக தகவல்..

செய்திகள்

இந்தியாவில் பொலிசாரால் தேடப்பட்டு வரும் சுவாமி நித்தியானந்தா இலங்கைக் காடுகளில் மறைந்திருப்பதாக இரகசியத் தகவல் ஒன்று கசிந்துள்ளது. இவருக்கு இங்கு புகலிடம் கொடுத்திருப்பவர் ஒரு பெரும் புள்ளி என்றும் கூறப்படுகின்றது. இவரைக் காண்பவர்கள் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தரலாம் என்று சமூக நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட புலிகள் மக்கள் முன்னணி கட்சியின் பதிவு ரத்து

செய்திகள்

பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட புலிகள் மக்கள் முன்னணி கட்சி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாகக் கருதப்படும் புலிகளுக்கும், குறித்த கட்சிக்குமிடையில் தொடர்பு எதுவும் காணப்படுகின்றதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. புலிகள் மக்கள் முன்னணி கட்சி அந்நாட்டு தேர்தல் செயலகம் முன்னர் அங்கீகாரம் வழங்கியிருந்த போதிலும், தற்போது குறித்த பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேர்தலில் குறித்த கட்சியின் சர்ர்பில் வேட்பாளர்களை நிறுத்த உத்தேசித்துள்ளதாக கட்சியின் தலைவர் நடராஜா பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். புலிகள் அமைப்பே உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு எதிராக பயங்கரவாத முத்திரை குத்தப்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தலில் வெற்றியீட்ட முடியுமா? என்பது குறித்து தமக்கு தெரியாது. எனது கருத்துகளை முன்வைப்பதே பிரதான இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த கட்சி பதிவு தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதனால் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் செயலக அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

சாவகச்சேரி மாணவன் கொலை வழக்கு நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் நடைபெற்றதன் விபரம்..!!

செய்திகள்

யாழ் சாவகச்சேரி மாணவன் கபிலநாத் படுகொலை தொடர்பாக சாவகச்சேரி நீதிமன்றம் விதித்த பிடியாணையின்பேரில் தேடப்பட்டு வரும் குமாரசிங்கம் கேசவன் (ஜீவன்) என்பவர் சாவகச்சேரி ஈ.பி.டி.பி. முகாமுக்கு பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவரின் கீழ் செயற்பட்டு வந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. மேற்படி மாணவன் படுகொலை தொடர்பாக நேற்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற பூர்வாங்க விசாரணைகளின் பின்னர் நீதிவான் த.பிரபாகரன் விடுத்த உத்தரவில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது. தேடப்படும் ஜீவனைக் கைது செய்வதற்கான பிடியாணை கடந்த 24ம் திகதிமுதல் பிறப்பிக்கப்பட்டுள்ளமையை தமது நேற்றைய உத்தரவில் மீண்டும் ஞாபகமூட்டியுள்ள நீதிவான் ஜீவனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சாவகச்சேரி சிரேஷ்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் சனத்குமாரவுக்கு நேற்றுத் திரும்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்படி ஈ.பி.டி.பி. முகாமுக்குப் பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவருக்கு அவரது முகாமில் இருந்து செயற்பட்டு வந்த ஜீவன் என்பவரால் தொலைபேசி அழைப்பு மூலமாக கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பந்தப்பட்ட சடலம் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டு அது தோண்டி எடுக்கப்பட்டது என்பதை பொலிஸார் குறிப்பிட்டமையை நீதிவான் தமது நேற்றைய உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் ஈ.பி.டி.பி. முகாமுக்கு பொறுப்பாகவுள்ள சூசைமுத்து அலெக்சாண்டருக்கு (சாள்ஸ{க்கு) இந்த வழக்கின் சந்தேகநபரான ஜீவனால் கூறப்பட்ட விக்கி தொடர்பாகவும், செல்வம் தொடர்பாகவும் அவர்களுக்கு இந்த வழக்கில் ஏதேனும் விதத்தில் சம்பந்தம் உள்ளதா? என்பது தொடர்பாகவும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள இரண்டாவது சந்தேகநபரான லோகேஸ்வரன் சாந்தீபனின் வாக்குமூலத்தை சிறையில் வைத்து பதிவு செய்யவும் நீதிவான் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிமன்றின் நேற்றைய உத்தரவில் குறிப்பிடப்பட்ட ஈ.பி.டி.பி. சாவகச்சேரி முகாம் பொறுப்பாளர் சூசைமுத்து அலெக்சாண்டர் (சாள்ஸ்) என்பவர் ஈ.பி.டி.பி. சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் வெற்றிலைச் சின்னத்தில் இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேசமயம், இப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி, பெரிய அரசடிப் பகுதியில் கடந்த 14ம் திகதி கடத்தப்பட்டுப் பின்னர் கடந்த 27ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட மாணவனும் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனுமான திருச்செல்வம் கபிலநாத் கொலை வழக்கின் பூர்வாங்க விசாரணை நேற்று சாவகக்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் சுமார் ஐந்தரை மணிநேரம் நடைபெற்றது. இதன்போது இந்தக் கொலை தொடர்பான முதலாவது சந்தேகநபராகத் தேடப்பட்டு வரும் குமாரசிங்கம் கேசவன் அல்லது ஜீவன் என்பவரது தாயாரான குமாரசிங்கம் திருப்பதி அம்மா, சகோதரியான குமாரசிங்கம் சுகன்ஜா ஆகியோரை, சாவகச்சேரிப் பொலீஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இவர்களை எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் நேற்றுக்காலை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கோலை செய்யப்பட்ட மாணவனின் தந்தையாரான எஸ்.திருச்செல்வம் சகோதரிகளான தி.தனுசியா, தி.கௌசிகா ஆகியோர் நீதிமன்றுக்கு சமுகமளித்திருந்தனர். சந்தேகநபர்கள் தரப்பில் இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான குமாரசிங்கம் கேசவன் அல்லது ஜீவன் என்பவரின் தாயாரான குமாரசிங்கம் திருப்பதி அம்மா, சகோதரியான குமாரசிங்கம் சுகன்ஜா மற்றும் இரண்டாம் எதிரியான யோகேஸ்வரன் சாந்தீபன், கணேஸ்வரன் தயாராஜ், திவாகரசர்மா துஷாந்தன், ரவின்ரங்க ஆகியோரை சாவகச்சேரிப் பொலீஸார் நீதிமன்றில் ஆஜர்செய்தனர். கோலை செய்யப்பட்ட மாணவரின் சகோதரியான திருச்செல்வம் தனுசியா, திருச்செல்வம் கௌசிகா ஆகியோர் பொலீஸாருக்கு வழங்கிய வாக்குமூலம் மன்றில் வாசிக்கப்பட்டது. அதில் தனது சகோதரனைக் கடத்தியவர்கள் அவரது கைத்தொலைபேசி இலக்கத்திலிருந்து தமது வீட்டுக்குத் தொடர்பு கொண்டு பேசினார்கள் என்று திருச்செல்வம் தனுசியா தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார். சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சனத்குமாரவின் வாக்குமூலமும் நீதிமன்றத்தில் நேற்றுப் பதிவு செய்யப்பட்டது. கோலை செய்யப்பட்ட மாணவரின் கைத்தொலைபேசி இரண்டாவது சந்தேகநபரான சாந்தீபனிடம் இருந்து மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கின் சந்தேகநபர்களில் திவாகரசர்மா துஷாந்தன், ரவின்ரங்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். ஏனைய சந்தேகநபர்களான யோகேஸ்வரன் சாந்தீபன், கணேஸ்வரன் தயாராஜ், குமாரசிங்கம் திருப்பதி அம்மா, குமாரசிங்கம் சுகன்ஜா ஆகியோரை எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் 7ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் டேவிட் மில்லிபாண்டின் கருத்துக்களை அரசாங்கம் நிராகரித்தது

செய்திகள்

பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் டேவிட் மில்பாண்ட் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களை நிராகரிப்பதாக பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். பிரிட்டன் வெளிவிவகாரச் செயலர் இலங்கை தொடர்பில் விமர்சனப் பாங்கான கருத்தினை வெளியிட்டுள்ள காலச்சூழ்நிலை சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசாங்கம் அடைந்த வெற்றியை உதாசீனம் செய்யும் வகையில் பிரிட்டன் செயற்படுகிறது. திட்டமிட்ட வகையில் அரசாங்கத்தை நெருக்கடியான நிலைக்கு இட்டுச் செல்லும்வகையில் இந்த அறிக்கையை டேவிட் மில்பாண்ட் வெளியிட்டுள்ளார். டேவிட் மிலிபாண்டின் அறிக்கை குறித்து அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் தக்க பதிலை விரைவில் அளிப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில், ஈ.பி.டி.பியினரால் தாக்கி கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிகழ்வு!! (மனதை உருக வைக்கும் புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

செய்திகள்

p10102611.jpgகடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர் வவுனியா, சாந்தசோலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர். இச்சம்பவம் நேற்று முன்தினமிரவு வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. இந்தப் படுகொலை தொடர்பில் ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஐந்தாவது சந்தேகநபராக ஈ.பி.டி.பியின் ஒன்றிய உறுப்பினராகிய துன்பம் என்கிற தினேஸ் என்பவரைப் பொலீசார் இன்றுமாலை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரென்று தெரிவிக்கப்படும் அன்ரனி ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குரு தலைமறைவாகியுள்ளதாகவும்,

மட்டு. மாநகர சபையின் சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் 4பேர் ஐ.ம.சு.முவில் இணைவு..!

செய்திகள்

upfa-logo-46575.jpgமட்டு. மாநகர சபையின் சுயேச்சைக்குழு உறுப்பினர்கள் 4பேர் ஐ.ம.சு.முவில் இணைந்து கொண்டதுடன் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அலிஸாஹிர் மௌலானாவை ஆதரிப்பதற்கும் தீர்மானித்துள்ளனர். இவர்களது இந்த தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவிய லாளர் சந்திப்பு அலிஸாஹிர் மௌலானா வின் ஏறாவூர் இல்லத்தில் நடைபெற்றது. மாநகரசபை உறுப்பினர்களான கந்தையா அருமைலிங்கம், வெலிங்ரன் ராஜேந்திர பிரசாந்த், செல்வராசா சசிகுமார் மற்றும் மகேந்திர மூர்த்தி சுரேந்திரன் ஆகியோர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தமது முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

சாவகச்சேரி மாணவன் கொலை தொடர்பில் ஈ.பி.டி.பி நுணாவில் முகாமில் செயற்பட்டவரை தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை..!

செய்திகள்

epdp_camp_23272_435.jpgகுடாநாட்டில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கபிலநாத்தின் படுகொலை தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.யின்) நுணாவில் முகாமில் செயற்பட்டுவந்தவர் எனத் தெரிவிக்கப்படும் ஜீவன் என்ற இளைஞனைத் தேடிக் கண்டுபிடித்துக் கைதுசெய்யுமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது. அவர் நாட்டைவிட்டு வெளியே தப்பிச்செல்ல இயலாதவகையில் விமானநிலையம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், சுங்கத்திணைக்களம் ஆகியவற்றுக்கும் பிடிவிறாந்தை அனுப்புமாறு சாவகச்சேரி நீதிவான் ரி.ஜே.பிரபாகரன் நேற்றுமுன்தினம் பணிப்புரை விடுத்துள்ளார். ஜீவன் என்பவர் கடந்த எட்டு வருடங்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நுணாவில் முகாமில் செயற்பட்டுவந்தவர் எனக் கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி இக்கடத்தல், படுகொலைச் சம்பவத்தின் சூத்திரதாரிகளாக பிரதானமாக இருவர் இருந்துள்ளனர் என்பது தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. கடந்த 14ம் திகதி மேற்படி கபில்நாத்தை, அவரது பாடசாலையில் உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவரும், ஜீவன் என்பவரும் மேற்படி உயர்தர வகுப்பு மாணவனின் வீட்டுக்குக் கூட்டிவந்திருக்கின்றார்கள். அச்சமயம் அந்த வீட்டில் அந்த மாணவனின் உறவினர்கள் எவரும் இருக்கவில்லை. அங்கு வைத்து கபில்நாத்தைத் தாக்கிய அவர்கள் இருவரும், பின்னர் அன்றிரவே கழுத்தை நெரித்து அவரைக் கொலைசெய்து, வீட்டின் பின்வளவில் உள்ள வாழைத்தோட்டத்தில் புதைத்திருக்கின்றனர். அந்த உயர்தர வகுப்பு மாணவன் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டமையையடுத்து அவர் எல்லா விவரங்களையும் விசாரணையாளர்களிடம் ஒப்புக்கொண்டுவிட்டார் என்றும் அதனையடுத்தே கபில்நாத்தின் சடலம் மீட்கப்பட்டது என்றும் கூறப்பட்டது. கொலையின் பின்னணி பற்றிய முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட உயர்வகுப்பு மாணவர் வெளியிட்டமையையடுத்து, இக்கொலையில் அவரது சகாவாக செயற்பட்டவரும், ஈ.பி.டி.பியின் நுணாவில் முகாமைச் சேர்ந்தவருமான ஜீவன் என்பவரைக் கைதுசெய்வதற்கான பிடிவிறாந்தை சாவகச்சேரி நீதிவான் பிறப்பித்தார்.

வவுனியாவில், ஈ.பி.டி.பியினரால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு, புலிகளின் பாணியை தொடரும் ஈ.பி.டி.பி!!

செய்திகள்

epdp1.gifகடந்த வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈ.பி.டி.பியின் சார்பில் 06ம் இலக்கத்தில் போட்டியிட்ட ஜெயராஜ் என்கிற ஈ.பி.டி.பி குருவும், ஈ.பி.டி.பியின் ஒன்றியத்தைச் சேர்ந்த தினேஸ், ரமணி, துன்பம், நிரோ உள்ளிட்ட ஐவரும் கிருஸ்ணா என்கிற 25வயதான தங்கராசா கிருஸ்ணகோபால் என்பவரை கடுமையாக தாக்கிப் படுகொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர் வவுனியா, சாந்தசோலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவர். இச்சம்பவம் நேற்றிரவு வவுனியா குருமண்காடு பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. இவரைத் தாக்கியதன் பின்னர் ஜெயராஜ் என்கிற குரு, நாம் இவரை அடித்துப் போட்டிருக்கிறோம். முடிந்தால் அம்புலன்ஸ்சுக்கு போன் பண்ணி காப்பாற்றுங்கள் என்று அயலில் காணப்பட்ட வீடுகளில் தெரிவித்துச் சென்றுள்ளார். உயிரிழந்தவருக்கு இன்று (பிறந்தநாள்) 25வயதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட பிரச்சினையா? அல்லது அரசியல் பிரச்சினையா? என்பது இதுவரை தெரியவரவில்லை. எனினும் புலிகளைப் போன்று ஈ.பி.டி.பியினரும் வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமல்ல என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் வன்னி மாவட்ட அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) மகாறம்பைக்குளம் உள்ளிட்ட பிரதேச மக்களுடன் சந்திப்பு

செய்திகள்

images.jpgவன்னி மாவட்டத்தில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களான புளொட் தலைவர் திரு.த.சித்தார்த்தன், புளொட் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன்(பவன்) மற்றும் புளொட் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் இன்று வவுனியா பகுதிகளில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையிலான பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் அண்ணாநகர் மற்றும் மகாறம்பைக்குளம் பிரதேசங்களுக்குச் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர். அண்ணாநகரிலும் மகாறம்பைக்குளத்திலும் அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு கூட்டங்கள் நடைபெற்றன. இங்கு உரையாற்றிய அப்பகுதி கிராமிய அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம், விளையாட்டு கழகங்கள் என்பவற்றின் பிரதிநிதிகள், புளொட் அமைப்பினர் கடந்த காலங்களில் இப்பகுதிகளில் மேற்கொண்டிருந்த வேலைத்திட்டங்களை வரவேற்றுப் பேசியதுடன், கடந்த பத்து வருடகாலமாக புளொட் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இல்லாததன் காரணத்தினால் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்பகுதிகளில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும், எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். அத்துடன் இம்முறை பொதுத் தேர்தலின்போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவதன் மூலமே இப்பகுதியின் அபிவிருத்திப் பணிகளையும், இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களையும் போக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளனர். இங்கு உரையாற்றிய புளொட் தலைவர் தி.த.சித்தார்த்தன் அவர்கள், கடந்த காலங்களில் புளொட் அமைப்பு இப்பகுதிகளில் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும், அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் விளக்கிக் கூறினார். அத்துடன் தொடர்ந்தும் நாம் இப்பகுதிகளில் பல்வேறு அபிவிருத்திப பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். இதுவே எமது முக்கிய நோக்கமாகும். எனவே மக்கள் அனைவரும் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை இராசேந்திரன்குளம் பகுதிக்கு விஜயம் செய்திருந்த புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் க.சிவநேசன் (பவன்) உள்ளிட்ட பிரதிநிதிகள் அப்பகுதி மக்களைச் சந்தித்துள்ளனர். அங்கு அப்பகுதி மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் புளொட் அமைப்பாளர் க.சிவநேசன் பங்கேற்று உரையாற்றினார். இதன்போது, அப்பகுதியில் கடந்தகாலங்களில் புளொட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எடுத்துக் கூறியதுடன், இப்பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகிறது என்றும், இதற்கு பொதுத் தேர்தலில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிடும் புளொட் வேட்பாளர்களுக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார். இங்கு உரையாற்றிய அப்பகுதி கிராமிய அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், விளையாட்டு சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், கடந்த காலங்களில் புளொட் அமைப்பு மேற்கொண்ட பணிகளை நினைவுபடுத்தியதுடன், புளொட் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவதன் மூலமே தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய முடியுமென்பதையும் சுட்டிக்காட்டினர். அத்துடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் புளொட் வேட்பாளர்களுக்கு பூரண ஆதரவுவழங்க வேண்டுமென்றும், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவதன் மூலமே கடந்த 10வருட காலமாக மேற்கொள்ளப்படாதிருந்த வேலைத்திட்டங்களையும், அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பம்-அரசஅதிபர் இமெல்டா சுகுமார்..!

செய்திகள்

la-2001.jpgமுல்லைத்தீவு நகரிலும் மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசஅதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். மோதல்களின்போது முல்லைத்தீவு நகரைவிட்டு வெளியேறியவர்களுள் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 16பேர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருப்பதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். வற்றாப்பளைக் கிராமம் முழுவதும் வெற்றிகரமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் துணுக்காய், மாந்தை கிழக்கில் 90சதவீதமான மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த 23ஆயிரம் பேர் இதுவரை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு மீள அழைத்துவரப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சி முன்னாள் எம்.பி யோகராஜன் மீது தாக்குதல்

செய்திகள்

20050228164329r-yogarajan.jpgஐக்கியத் தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.யோகராஜன் நேற்றுமாலை ஹட்டன் கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில், இ.தொ.கா. ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதுடன் அவரது வாகனமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆர்.யோகராஜன் சிறு காயங்களுக்குள்ளானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக இருந்துவந்த ஆர்.யோகராஜன் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கட்சித் தலைமைப்பீடத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மாகாண துணை ஆளுநராக தமிழர் நியமனம்.

செய்திகள்

show_image_npadvsinglephoto.jpgஅமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாண துணை ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்க அதிபர் பராக் ஒபாமா தீர்மானித்துள்ளார். அமெரிக்காவில் வாழும் தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி என்பவர் அப்பதவியில் நியமிக்கப்பட உள்ளார். இவர் ஒபாமாவின் அரசாங்கத்தில் கொள்கை திட்டமிடல் ஆலோசகராக கடமையாற்றியுள்ளார்.
இலினொய்ஸ் மாகாணத்துக்கான ஆளுநர், துணை ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ளது. துணை ஆளுநராக ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டால், அமெரிக்க மாகாணமொன்றில் இந்தப்பதவியை முதன்முதலில் பெற்ற தமிழர் என்ற பெருமை இவரையே சாரும்.
அதிபர் ஒபாமாவின் நீண்டகால நண்பரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஒபாமாவின் தேர்தல் பிரசாரங்களில் கடந்த காலங்களில் முக்கிய பங்கெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனோமா பொன்சேகா பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சந்திப்பு..!

செய்திகள்

anoma-150×150.jpgஜெனரல் சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கொழும்பு பேராயர் பேரருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கொழும்பு பேராயரிடம் திருமதி அனோமா பொன்சேகா கையளித்துள்ளார். இதன்போது ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன் நெத்தி, டிரான் அலஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இன்றுகாலை நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐதே.கட்சி வரலாறு காணாத தோல்வியைத் தழுவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்..!

செய்திகள்

sirisena-300×240.jpgஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி கட்சியும் வரலாறு காணாததோல்வியை தழுவும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரவித்துள்ளார் இதேவேளை எந்தவொரு கட்சியும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈட்டாத மாபெரும் வெற்றியும் தமது கட்சி ஈட்டிக் கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் தீவிர ஆதரவாளர்களும் சிரேஷ்ட உறுப்பினர்களும் கிரமமாக ஆளும் கட்சியில் இணைந்துக் கொள்வதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கூட்டமொன்றை ஒழுங்கு செய்தால் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் எதிர்கட்சி உறுப்பினர்களை வரவேற்பதில் அதிகளவு நேரம் செலவாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விருப்பு வாக்குகளின் மூலம் நிராகரிக்கப்படுவோருக்கு நாடாளுமன்றம் வரமுடியாது -ஊடக அமைச்சர் தெரிவித்துள்ளார்..!

செய்திகள்

lakshman_yapa_abeywardenagetimage.jpg
விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நிராகரிக்கப்படும் வேட்பாளர்கள் வேறும் வழிகளில் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக மக்களினால் நிராகரிக்கப்படும் வேட்பாளர்கள் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்தினுள் நுழைய காட்டும் முனைப்புகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாதென அவர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்ட போது அவர் இதனைச் சுட்டிக் காட்டியுள்ளார். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நேரடியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார். வேறு கட்சிகளில் மூலம் தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு ஆட்சி அமைக்கவேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் கடந்தகாலங்களில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக தகுதியற்றவர்களிடமும் ஒத்துழைப்புக் கோர நேரிட்டதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் அம்பாறைக்கு விஜயம்..!

செய்திகள்

slmcrh.jpgசிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் இன்று அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்கின்றார். நாடாளுமன்றத்தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டபின் இன்று மாலை கொழும்பு திரும்புவார் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி, ஹஸனலி தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்ஹகீம் நேற்று மட்டக்களப்பு, திருமலை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரிவினைவாத கோட்பாடுகள் முறியடிக்கப்பட வேண்டும்-ஜாதிக ஹெல உறுமய..!

செய்திகள்

jhu1.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் பிரிவினைவாத கோட்பாடுகள் இந்தத் தேர்தலில் முறியடிக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. டை கோர்ட் அணிந்த பிரிவினைவாத சக்திகள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க முனைப்புக்காட்டி வருவதாக கட்சி எச்சரித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கைப் பிரகடனங்கள் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கக்கூடிய டை கோர்ட் அணிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாதிகளுக்கு எதிராக குரல்கொடுக்க திறமைமிக்க தேசப்பற்றுடைய இளைஞர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என்றும் அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

மட்டகளப்பு வவுணதீவு பகுதியில் ஆகாரம் நஞ்சுத் தன்மையால் 112 மாணவர்கள் வைத்தியசாலையில்..!

செய்திகள்

schools-200_4.jpgமட்டகளப்பு வவுணத்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இருட்டுச்சேலை மடு வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 112 மாணவர்கள் அருந்திய ஆகாரத்தில் நஞ்சுத்தன்மை கலக்கப்பட்டதால் அவசர வைத்திய சிகிச்சை பிரிவுக்கு உட்படுத்தப்பட்டனர். இருட்டுச்சேலை மடு விஷ்னு வித்தியாலயத்தை சேர்ந்த இம் மாணவர்கள் பாடசாலையில் வழங்கப்பட்ட சத்துணவினை அருந்திய பின்னர் வயிற்றிழைவு மற்றும் வாந்தி எடுத்து நோய்க்கு உட்பட்ட பின்னர் மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக இவ் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.
இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 06 வயதிற்கும் 12 வயதிற்கும் உட்பட்டவர்கள் எனவும் தற்போதைய நிலையில் ஆபத்தான நிலையில் இருந்து அவசர சிகிச்சை நிலைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பணிப்பாளர் முருகானந்தன் தெரிவித்துள்ளார்.மேலும் இச் சம்பவம் தொடர்பில் மட்டகளப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இன்று மீண்டும் திறக்கப்படுகின்றது..!

செய்திகள்

mannar8.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் மீள் குடியேற்றம் நடைபெற்று வந்த தைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாஞ் சோலையில் உள்ள அரசினர் மாவட்ட வைத்தியசாலை இன்று வியாழக் கிழமை மீளவும் திறக்கப்படுகின்றது. முல்லைத்தீவு அரச அதிபர் திரு மதி இமல்டா சுகுமார் இத்தகவலைத் தெரிவித்தார். வடக்குமாகாண அளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இந்த வைத் தியசாலையை மீளவும் திறந்துவைப் பார். இதனைத் தொடர்ந்து இந்த வைத்தியசாலையில் வைத்தியசேவை கள் ஆரம்பமாகி நடைபெறும். முல் லைத்தீவு பட்டினப் பகுதியில் முதன் முதலில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 16பேர் தற்போது மீளக்குடியேறியுள் ளனர். அவர்களைத் தவிர கரைத்துறைப் பற்று பிரதேச செயலர் பிரிவில் முல் லைத்தீவு பட்டணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் இதுவரை ஆயிரத்து 334 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளன எனவும் அரச அதிபர் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியேறிய பகுதிகள் உள்ளடங்கலான பகுதிகளுக்கும் வவு னியாவுக்கும் இ.போ.ச. பஸ் சேவை கள் இடம்பெறுவதுடன் ஆங்காங்கே ஆரம்ப சுகாதார நிலையங்கள் மீளக் குடியேறிய மக்களுக்கு வைத்திய சேவைகளை வழங்கிவருவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் மேலும் தெரிவித்தார்.

சமுர்த்திக் கொடுப்பனவை அதிகரிக்க அரசு தீர்மானம்

செய்திகள்

srilankatemplateidstandard__blob.gifசமுர்த்தி கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆகக் குறைந்த கொடுப்பனவை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இதற்கு வழி செய்யப்படும் என்று தகவல்துறை அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அத்துடன் சமுர்த்தி அதிகார சபையின் ஊழியர்கள் 23700 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
16 இலட்சம் பேர் சமுர்த்தி வறுமை ஒழிப்பு நிவாரண உதவியை பெற்று வருகின்றனர். அத்துடன் சமுர்த்தி அதிகார சபை அவர்களுக்கு இலகு கடன் சுய வேலை வாய்ப்பு மற்றும் சிறு முதலீட்டு திட்டங்களுக்கு உதவி வருகிறது. சமுர்த்தி நிவாரண உதவித் தொகையை அதிகரித்தல் சுயதொழில் வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் சிறிய முதலீட்டு திட்டங்களுக்கு உதவுதல் ஆகியவை மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரப்பிரசாதங்களாகும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.