பொதுத்தேர்தல் முடிந்ததும் ஈ.பி.டி.பி.யின் கட்சி மாநாடு!

செய்திகள்

epdp.gifஎதிர்வரும் பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் முடிவடைந்ததும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய ஈ.பி.டி.பி தமது கட்சியின் மாநாட்டை நடாத்த தீர்மானித்துள்ளதாக கட்சியின் உயர் அரசியல்பீடம் அறிவித்துள்ளது.
மேலும் இது குறித்து தெரிவிக்கப்படுகையில் கடந்த கால அனுபவங்களில் இருந்து
அர்த்தமுள்ள படிப்பினைகளை கற்றுக்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சமகால அரசியல் சூழல் குறித்தும் முழுமையான ஒரு ஜனநாயக சூழலுக்கு ஏற்றவாறு கட்சியை மேலும் புனரமைப்புச் செய்வது குறித்தும் கட்சியையும் மக்களையும் எதிர்கால இலக்கு நோக்கி எவ்வாறு வழி நடத்திச் செல்வது என்பது குறித்தும் தமது கோட்பாட்டு வழி நின்று மேலும் செப்பனிட்டுச் செல்ல வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்தே விரைவாக கட்சியின் மாநாட்டை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு மேலாகவே கட்சியின் மாநாட்டை நடாத்துவது என்பது குறித்த தீர்மானம் தம்மால் எடுக்கப்பட்டிருந்த நிலையிலும் அடுத்தடுத்து வந்திருந்த தவிர்க்க முடியாத சூழல்கள் மாநாட்டை நடாத்துவதற்கான சந்தர்ப்பங்களைப் பின்தள்ளி வந்திருந்ததாகவும் ஆயினும் எதிர்வரும் மே மாதம் முற்பகுதியில் கட்சியின் மாநாட்டை தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் நடாத்தி முடிப்பதற்கான தயாரிப்பு வேலைகளை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் யாழ் வன்னி திருமலை மட்டக்களப்பு அம்பாறை கொழும்பு மற்றும் சர்வதேச பிராந்தியங்களின் நிர்வாகங்களோடு தாம் கலந்துரையாடி வருவதாகவும் அனைத்து பிராந்தியங்களில் இருந்தும் கட்சியின் அங்கத்தவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்திருக்கும் அந்த அறிக்கையில் சரியான கருத்துக்களும் அதற்கான நடைமுறைகளும் மக்களிடம் இருந்தே பிறந்து வருவதால் ஒவ்வொரு பிராந்தியங்களில் இருந்தும் கருத்துச் சொல்ல விரும்பும் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எவராயினும் தங்களது பிராந்திய நிர்வாகங்களோடு தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் கட்சியை நோக்கி முன்வைப்பதை தாம் ஆரோக்கியமான ஒரு நடவடிக்கையாக விருப்பமுடன் வரவேற்பதாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உயர் அரசியல் பீடம் தெரிவித்துள்ளது.