ஐ.நா.அரசியல்துறை பிரதிப் பொதுச் செயலாளர் இலங்கை வரவுள்ளார்..!

செய்திகள்

170909-pascoe.jpgஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் துறை பிரதிப் பொதுசெயலாளர் லின் பெஸ்கோ விரைவில் மீண்டும் இலங்கை வரவுள்ளார் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காகவே அவர் இலங்கை வரவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் பான் கீமூன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நியுயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இலங்கை குறித்து மேற்கொண்ட உரையிலேயே பொதுசெயலாளர் இவ்விடயம் குறித்து அறிவித்துள்ளார். இதன்போது யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடிமர்த்தல் மற்றும் பொறுப்பு வாய்ந்த முறைமையொன்றை உருவாக்குதல் போன்ற விடயங்களில் இலங்கை மேலும் முன்னேற்றமடைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த வியாழக்கிழமை தாம் மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடலின் போது நேரடியாகவும் நேர்மையாகவும் கருத்துக்களை பறிமாற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ள அதேவேளை யுத்தம் நிறைவடைந்த பின்னர் தாம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது உயர்மட்ட அதிகாரிகள் பல விடயங்கள் குறித்து இணங்கப்பாட்டை எட்டியதாகவும் ஐக்கிய நாடுகள் பொதுசெயலாளர் பான் கீமூன் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர இலங்கை தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிப்பது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்திருப்பதாகவும் ஐ.நா.செயலாளர் தமது உரையில் தெரிவித்துள்ளார்.

புலிகளின் சட்டப் பிரிவில் பணியாற்றிய பெண் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைப்பு

செய்திகள்

australian-flag-reduced4-597×499.jpgவிடுதலை புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ் தீவில் வைத்துத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய இணையத்தளம் செய்திவெளியிட்டுள்ளது.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 78 பேர் கிறிஸ்மஸ் தீவருகே வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தமது அகதி அந்தஸ்து கோரிக்கை அங்கீகரிக்கப்படும் வரை ஓஷியானிக் விகிங் கப்பலில் இருந்து இறங்குவதில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அவுஸ்திரேலிய அரசாங்கம் 12 கிழமைகளுக்குள் இவர்களுடைய கோரிக்கை மற்றும் மீள் குடியேற்றம் குறித்து கவனம் செலுத்துமென உறுதியளித்திருந்தது.இவ் உறுதிமொழியை அடுத்து இலங்கை அகதிகள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்நிலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி பெண்ணின் சகோதரர் கருத்துத் தெரிவிக்கையில்
அவர் விடுதலை புலிகளின் நீதிமன்றம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றியிருக்கலாம்.எனினும் அவர் விடுதலை புலி உறுப்பினர் அல்லர்’ எனத் தெரிவித்தார்.
மோதல் முடிவடைவதற்கு முன்னரான காலப்பகுதியில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைகளுக்குக் கீழ் பணியாற்றுவதைத் தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளவர்கள் என ஏற்கனவே நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது ஐந்தாவதாக இப்பெண் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தனது இரு பிள்ளைகள்இ தாய்இ மற்றும் சகோதரருடன் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கப்பல் மூலம் பயணித்துள்ளார். இவரது கணவர் ஏற்கனவே அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தினால் அனுமதி மறுக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

சுவிஸில் இலங்கை டயஸ்போராவின் சார்பில் தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வு- (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

செய்திகள்

சுவிஸ்லாந்திலுள்ள இலங்கை டயஸ்போராவின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை மாலை தமிழ், சிங்கள கலாச்சார நிகழ்வொன்று சுவிஸ்லாந்தின் பிரிபெர்க் மாநிலத்தில் நடைபெற்றது. சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக தமிழ் சிங்கள பொதுமக்கள் பகிரங்கமாக ஒன்றுகூடி நடாத்திய கலைநிகழ்ச்சி இதுவாகும். மேற்படி நிகழ்வில் பெருந்திரளான தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்டிருந்ததுடன், இதில் பிரதம விருந்தினர்களாக ஜெர்மனி மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றும் திரு.ரி.பி.மடுவகெதர, சுவிஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் திருமதி.சேனகா செனவிரத்ன, பௌத்த மதகுருவான மதிப்புக்குரிய திரு.கோட்டேபாய், மற்றும் இந்து மதகுருவான சூரிச் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலய குருவான திரு.சர்மா எனும் திரு.சரகணபவானந்த குருக்கள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அத்துடன் தமிழ் அமைப்புக்களின் சார்பில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டிருந்தனர். குத்துவிளக்கேற்றல் மற்றும் தேசியகீதத்துடன் ஆரம்பமான மேற்படி கலை நிகழ்வின் போது கண்டிய நடனம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல தமிழ், சிங்கள கலை நிகழ்ச்சிகளும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தமிழ் சிங்கள பாடல்களையும் பாடியமையும் இடம்பெற்றன. சுவிஸ் வரலாற்றில் முதன் முறையாக தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து மேற்படி கலை நிகழ்ச்சியினை நடத்தியமையும், பெருமளவு தமிழ், சிங்கள மக்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயாகும். மேற்படி கலை நிகழ்வுக்கு பிரபல வர்த்தகர்கள் பலரும் அனுசரணை வழங்கியிருந்தனர்.