யானை - அன்னம் சின்னம் தொடர்பில் எதிர்க்கட்சிகளிடையே முரண்பாடு
8 February 2010 செய்திகள்கட்சி சின்னம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட அதிக நாட்டம் காட்டுவதாகவும், ஜே.வி.பி யானைச் சின்னத்தின்கீழ் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அன்னபட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடாக காணப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட்டால், ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும் ஏனைய கட்சிகளின்; ஆதரவுடன் ஜே.வி.பி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுமாறு ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் அவர் எவ்வித பதிலையும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்னப்பட்சி சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை தேர்தலில் களமிறக்கும் முயற்சிகளை பொன்சேகா மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யானைச் சின்னம் தொடர்பில் ஜே.வி.பியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின்N பாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஜே.வி.பி மேற்கொண்ட உடன்படிக்கையின் மூலம் ஜே.வி.பி 39 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதுடன், சில சிரேஸ்ட சுதந்திரக் கட்சித் தலைவர்கள் தேர்தலில் தோல்வியைத் தழுவினர். இதனைக் கருத்திற் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் ஜே.வி.பியுடன் கூட்டணி சேர்வதில் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
